திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி

திருச்சி அருகே திருவெறும்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் சனிக்கிழமை அதிகாலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

திருச்சி அருகே திருவெறும்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் சனிக்கிழமை அதிகாலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
 திருவெறும்பூர்-நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படைக்கலன் தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்பு அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இரு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை இந்த ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் ஏடிஎம் அறைக்குள்ள மர்மநபர்கள் இருந்ததை கண்டு சப்தம் போட்டுள்ளார்.
 இதையடுத்து, துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இருந்த ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைகண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் நேரில் சென்று ஏடிஎம் அறைக்குள் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய், தடயவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
 விசாரணையில், மர்மநபர் இருவர் முகத்தில் கருப்பு மை பூசியபடி வருவதும், ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைப்பதும், அவர்கள் தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
 அதோடு, ஏடிஎம் இயந்திரத்தை தாக்கும் போது எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. ஏடிஎம் அறை வாயில் பகுதியில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
 மேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 பெல் நிறுவன கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருடிச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் திருட்டு முயற்சி நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com