பொள்ளாச்சி: போலி மருத்துவர்கள் இருவர் கைது

பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவம், எலக்ட்ரோ ஹோமியோபதி என்னும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரு போலி மருத்துவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்

பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவம், எலக்ட்ரோ ஹோமியோபதி என்னும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரு போலி மருத்துவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 பொள்ளாச்சி, நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா (50) என்பவர் பத்மா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார். இவர் ரத்த அழுத்தம், மூலம், தோல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
 கடந்த ஆகஸ்ட் மாதம் புணே நகரில் இருந்து வந்த சிரஞ்சீத் என்பவர் பத்ராவிடம் ரூ. 20,000 கட்டணம் செலுத்தி மூல நோய்க்கு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகுந்த பாதிப்படைந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் உறவினரான மருத்துவர் ஜானிகுமார் பிஸ்வாஸ் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆகியோரிடம் அதுகுறித்துப் புகார் தெரிவித்தார்.
 மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலர் பாஸ்கரன், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பொள்ளாச்சி வடக்கு வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா ஆகியோர் பத்ராவின் கிளினிக்கில் சனிக்கிழமை சோதனை செய்தனர்.
 இதுகுறித்து மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:
 பத்மா கிளினிக்கில் நடத்திய சோதனையின்போது பத்ராவின் மருத்துவப் படிப்புக்கான ஆவணங்கள் இல்லை. 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, பத்ரா கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். எனது புகாரின் அடிப்படையில் போலி மருத்துவர் பத்ராவை போலீஸார் கைது செய்தனர். வருவாய்த் துறையினர் போலி மருத்துவமனைக்கு "சீல்' வைத்தனர்.
 இந்நிலையில் பொள்ளாச்சி, திருநீலகண்டர் வீதியில், ராமசந்திரன் (58) என்பவர் கிட்னி, கேன்சர் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. அங்கும் சோதனை நடத்தினோம். அதில், 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராமசந்திரன் ஆயுர்வேத, சித்த, வர்ம, குருகுல வைத்தியம் என்னும் பெயரில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர் தன்னை பாரம்பரிய மருத்துவர் என்று கூறி வந்துள்ளார்.
 மருத்துவப் படிப்புக்கான முறையான ஆவணங்கள் இல்லாததாலும், காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்ததாலும் வருவாய்த் துறையினர் அந்த கிளினிக்கிற்கு "சீல்' வைத்தனர். போலீஸார் ராமசந்திரனை கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவருக்கு ஆதரவாக வந்த வேலாயுதம் என்பவர், தான் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் என்றும், பொள்ளாச்சி பதிணென் சித்த மருத்துவர் சங்கத்தின் தலைவர் என்றும் தெரிவித்தார். அவரிடமும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com