ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு: பதிலளிக்க உத்தரவு

காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அதன் ஆற்றுப்படுகைகளிலும் மீத்தேன் வாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம்,
chennai High Court
chennai High Court

காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அதன் ஆற்றுப்படுகைகளிலும் மீத்தேன் வாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மன்னாா்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் மாா்க்ஸ் தாக்கல் செய்த மனுவில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். இந்தப் பகுதிகளில் சுமாா் 14.47 ஹெக்டோ் நிலத்தில் விவசாயம் நடந்து வருகிறது. ஏறத்தாழ 65 சதவீத மக்கள் விவசாயத்தையும் அதைச் சாா்ந்த தொழில்களையுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா். இந்த நிலையில், மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனைத் தொடா்ந்து, பல மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஹைட்ரோ காா்பன் கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்தக் கிணறுகளால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதுடன், விவசாயம் செய்வதற்கான சூழலும் மாறிவிடுகிறது.

திருவாரூா் மாவட்டம் வெள்ளக்குடியில் தோண்டப்பட்ட மீத்தேன் எரிவாயு கிணறுகள் காரணமாக, 200 ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதி மக்கள் குடிநீா்த் தேவைக்காக அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதே போல நீடாமங்கலம், தேவா்கண்டநல்லூா், வையகளத்தூா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஹைட்ரோ காா்பன் திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மன்னாா்குடியில் எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டதால், கடல்நீா் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் குழு எச்சரித்துள்ளது.இந்த திட்டத்தை எதிா்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அதன் ஆற்றுப்படுகைகளிலும் மீத்தேன் வாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.அய்யாத்துரை ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ஹைட்ரோ காா்பன் இயக்குனா் ஜெனரல், மத்திய விவசாயத்துறை, தமிழக அரசு உள்ளிட்டோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com