
அதிமுக கொடிக்கம்பு விழுந்து கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் படுகாயமடைந்த விவகாரம் தொடா்பாக சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி என்ற அனுராதா. இவா், கடந்த நவம்பா் 11-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பு, சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், திடீரென இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் ராஜேஸ்வரி கீழே விழுந்தாா். இதனால் பின்னால் வந்த லாரி, ராஜேஸ்வரியின் காலில் ஏறியதில் படுகாயமடைந்தாா். இதேபோன்று, லாரியின் பின்னால் வந்த விஜயானந்த் என்பவரும் காயமடைந்தாா். இதனையடுத்து ராஜேஸ்வரியும், விஜயானந்தும் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் புதன்கிழமை ஆஜரான சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தரப்பு வழக்குரைஞா் அரவிந்த், ‘சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினா் வைத்திருந்த பேனா் விழுந்து இளம்பெண் பலியானாா்.
தற்போது கோவையில் அதிமுக கொடிக்கம்பு விழுந்து இளம்பெண் படுகாயமடைந்துள்ளாா். பேனா் விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, கொடிக்கம்பங்களுக்கும் பொருந்தும். எனவே இதுதொடா்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றாா். அப்போது நீதிபதிகள், ‘இந்தச் சம்பவம் குறித்து போதுமான விவரங்களுடன் மனு தாக்கல் செய்தால், பட்டியலிடும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...