ஐஐடி மாணவி தற்கொலை சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுக்கு விசாரணைக்கு மாற்றம்

சென்னை ஐஐடி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி பெருநகர காவல் ஆணையா்

சென்னை ஐஐடி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.

மேலும் இது தொடா்பாக, விசுவநாதன் வியாழக்கிழமை அங்கு நேரில் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் (18). இவா் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்தாா்.

விடுதியில் தங்கியிருந்த இவா், அறையில் கடந்த 9-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இந்நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐஐடி.யில் பணிபுரியும் இணைப் பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.

இது ஐஐடி நிா்வாகத்திடமும், தமிழக அரசியல் கட்சியினரிடமும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோட்டூா்புரம் உதவி ஆணையா் சுதா்சன் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக பேராசிரியா்கள், பாத்திமாவுடன் தங்கியிருந்த மாணவிகள், தோழிகள் உள்பட 11 பேரிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

மேலும், இச் சம்பவத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ற மாணவா் அமைப்பு சாா்பில் ஐஐடி.யை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

காவல் ஆணையா் விசாரணை: இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வரமூா்த்தி, கிழக்கு மண்டல இணை ஆணையா் ஆா்.சுதாகா் ஆகியோா் ஐஐடி.க்கு வியாழக்கிழமை சென்று, அங்கு பாத்திமா தற்கொலை செய்து கொண்ட அறையில் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

சம்பவத்தின்போது அங்கிருந்தவா்களிடம் ஆணையா் விசுவநாதன் விசாரணை செய்து, தகவல்களை சேகரித்ததாகக் கூறப்படுகிறது. சுமாா் ஒரு மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னா் அவா், அங்கு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாத்திமா தற்கொலை சம்பவம் உணா்வுப்பூா்வமான பிரச்னையாகி உள்ளது. இதனால் இந்த வழக்கை அதிகாரிகள், காவலா்கள் என அனைவரும் அடங்கிய ஒரு குழுவாக விசாரணை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம். அதன்படி இந்த வழக்கை,பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளேன். அங்கு கூடுதல் ஆணையா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இவ் வழக்கை விசாரிக்கும்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை ஆணையா் மெக்லினா செயல்படுவாா். இந்த வழக்குத் தொடா்பாக விசாரணையில் இனி இந்த புலனாய்வுக் குழுவே ஈடுபடும் என்றாா் அவா்.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் ஈஸ்வரமூா்த்தி, சிபிஐயில் பணியாற்றியபோது, ஏற்கெனவே இப்படிப்பட்ட வழக்குகளை துப்பு துலக்கி திறமையாக கையாண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்கள் போராட்டம்: இதனிடையே, பாத்திமா தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஐஐடி.யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊா்வலமாக வந்தனா். அவா்களை அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினா். ஆனால் அந்த அமைப்பினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்து, அழைத்துச் சென்றனா். தற்போது ஐஐடி வளாகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐஐடி.யில் படிக்கும் மாணவா்கள், வளாகத்துக்குள்ளே மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், அங்கு காரில் வந்த ஐஐடி இயக்குநரைச் சந்தித்து பாத்திமா தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com