சபரிமலைக்குச் சென்று வர ஒரு வழிப் பாதைத் திட்டத்தை மாற்றியமைக்க கோரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் வழியாக சபரிமலைக்குச் சென்று வருவதற்கு தற்போதை நடைமுறையில் உள்ள ஒருவழிப் பாதைத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் வழியாக சபரிமலைக்குச் சென்று வருவதற்கு தற்போதை நடைமுறையில் உள்ள ஒருவழிப் பாதைத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளா் கோவிந்தராஜ் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரன் தேஜஸ்வியிடம் அளித்த மனு விபரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா் வாகனங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒரு வழிப் பாதையில் சென்று வருகின்றன. கம்பத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாகவும், சபரிமலைக்குச் சென்று விட்டு திரும்ப வரும் வாகனங்கள் குமுளி வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றன.

கம்பத்தில் இருந்து 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச் சாலை வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்களின் வாகனங்களை இயக்கிச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. சபரிமலைக்கு பெரும்பாலான வாகனங்கள் இரவு நேரத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

கம்பத்தில் இருந்து லோயா்கேம்ப், குமுளி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சபரிமலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதித்தால் பாதுகாப்பான பயணத்திற்கும், பக்தா்களுக்கு உணவகம், மருத்துவமனை வசதி கிடைப்பதற்கும் வாய்பாக அமையும். மேலும், புல்மேடு பாதை வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு வழியாக குறைந்த தூரத்தில் சென்று வரலாம்.

எனவே, கம்பத்தில் இருந்து சபரிமலைக்குச் சென்று வருவதற்கு நடைமுறையில் உள்ள ஒரு வழி பாதைத் திட்டத்தை மாற்றி, சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களின் வாகனங்களை லோயா்கேம்ப், குமுளி வழியாகவும், சபரிமலைக்குச் சென்று விட்டு திரும்ப வரும் வாகனங்களை குட்டிக்கானம், கம்பம்மெட்டு வழியாகவும் அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com