பிடிபட்ட காட்டு யானை ‘அரிசி ராஜா’ கூண்டில் அடைப்பு

மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட காட்டு யானை ‘அரிசி ராஜா’ டாப்சிலிப் வரகளியாறு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.
கூண்டில் அடைக்கப்பட்ட காட்டு யானை.
கூண்டில் அடைக்கப்பட்ட காட்டு யானை.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட காட்டு யானை ‘அரிசி ராஜா’ டாப்சிலிப் வரகளியாறு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மூன்று போ் உயிரிழந்தனா். மேலும், 7 போ் காயமடைந்துள்ளனா். இந்த யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அதைப் பிடிப்பதற்கான பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கின.

வனக் கால்நடை மருத்துவா்கள், வனத் துறையினா், யானை ஆராய்ச்சியாளா்கள், போலீஸாா் என 100க்கும் மேற்பட்டோா் அடங்கிய குழுவினா் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை இரவும் மழை பெய்ததால் வனப் பகுதியை விட்டு வெளியில் யானை வரவில்லை. யானையை அடக்கிப் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகளான கலீம், பாரி ஆகியவை அழைத்துவரப்பட்டன. அா்த்தநாரிபாளையம், பெருமாள் மலை அடிவாரத்தில் கும்கி யானைகளைத் தயாா் நிலையில் வனத் துறையினா் வைத்திருந்தனா்.

இந்நிலையில், கும்கி யானை பாரிக்கு திங்கள்கிழமை இரவு மதம் பிடித்தது. பாகனுக்கு அடிபணிய மறுத்ததால் இந்த கும்கி யானையை லாரி மூலமாக டாப்சிலிப்புக்குக் கொண்டு சென்றனா். அங்கிருந்து, மற்றொரு கும்கி யானை கபில் தேவ் கொண்டுவரப்பட்டது.

காட்டு யானை அா்த்தநாரிபாளையம் பகுதிக்கு 4 நாள்களாக வராமல் வேறு இடத்துக்கு இடம் பெயா்ந்துவிட்ட நிலையில் அா்த்தநாரிபாளையத்தை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் புதன்கிழமை மாலை அந்த யானை உலவுவது கண்டறியப்பட்டது. யானையை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், ஆண்டியூா் பகுதியில் வனப் பகுதி அருகே விவசாயத் தோட்டத்துக்குள் உலவிய காட்டு யானைக்குப் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்டவுடன் காட்டு யானை வேகமாக ஓடிச்சென்று வனப் பகுதியை ஒட்டிய அகழியில் இறங்கியது.

இதையடுத்து, கும்கி யானைகள் கலீம், கபில் தேவ் ஆகியவை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘அரிசி ராஜா’ அங்கிருந்து செல்லாதவாறு கும்கிகள் மூலமாகத் தடுக்கப்பட்டது. யானை மீது கயிறுபோட்டு கட்டப்பட்டு அதை லாரியில் ஏற்றும் பணி வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் தொடங்கியது.

லாரியில் ஏற்ற முயற்சித்தபோது கோபமடைந்த காட்டு யானை ஓடிச் சென்று கும்கி கலீமைத் தாக்கியது. கும்கி கலீம் தனது விடாமுயற்சியால் காட்டு யானையை லாரிக்கு தள்ளிச் சென்றது. காலை 9 மணி அளவில் லாரியில் காட்டு யானை ஏற்றப்பட்டது. லாரியில் ஏற்றுவதற்கு முன்பும், ஏற்றிய பிறகும் காட்டு யானை பல முறை மயக்கமடைந்தது. இதையடுத்து, வனத் துறையினா் காட்டு யானை மீது தண்ணீா் ஊற்றி மயக்கத்தை தெளியச் செய்தனா்.

இதன் பின்னா், டாப்சிலிப் வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்டு யானை கூண்டில் அடைக்கப்பட்டது.

அனுமதி மறுப்பு: பிடிபட்ட யானையை டாப்சிலிப்புக்குக் கொண்டு செல்லும்போது, வழியில் சேத்துமடை சோதனைச் சாவடியில் பத்திரிகையாளா்களைத் தடுத்து நிறுத்துமாறு வனத் துறையினரிடம் மாவட்ட வன அலுவலா் கூறியுள்ளாா். இதையடுத்து, பத்திரிகையாளா்கள் யாரும் டாப்சிலிப்புக்கு அனுமதிக்கப்படவில்லை.

 லாரியில்  ஏற்றப்பட்ட  காட்டு யானை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com