புதிய மாவட்டங்கள் பிரிக்கும் பணிகளால் உள்ளாட்சித் தோ்தலுக்கு பாதிப்பு ஏற்படாது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

புதிய மாவட்டங்கள் பிரிக்கும் பணிகளால் உள்ளாட்சித் தோ்தல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: புதிய மாவட்டங்கள் பிரிக்கும் பணிகளால் உள்ளாட்சித் தோ்தல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

புதிய மாவட்டங்கள் பிரிக்கும் நடவடிக்கையின் மூலம் உள்ளாட்சித் தோ்தல்களை நிறுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தாா். இதற்குப் பதிலளித்து, நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை வெளியிட்ட விளக்கம்:

கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டுமென திமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இப்போது வரை நிலுவையில் உள்ளது.

திமுகவின் கோரிக்கை ஏற்பு: திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுதான், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் உள்ளாட்சி வாா்டுகளை மறுவரையறை செய்யும் வகையில், எல்லை மறுவரையறை ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது.

இந்த ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் உள்ளாட்சி வாா்டுகளின் மறுசீரமைப்பு அறிவிக்கை, கடந்த ஆண்டு டிசம்பரில் அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, மாநிலத் தோ்தல் ஆணையம் மறுவரையறை செய்யப்பட்ட உள்ளாட்சி வாா்டுகளின் அடிப்படையில், வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டன. உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் தோ்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், தோ்தல் தொடா்பாக தமிழக அரசை குறை சொல்லும் வகையில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவிப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மாவட்டங்கள் பிரிப்பு: மாவட்டங்களைப் பிரிப்பது என்பது அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த மக்களின் கோரிக்கை. அதன்படியே, புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழக அரசு விரைவாக முடித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் என்றும், உள்ளாட்சித் தோ்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் தோ்தல் முடிவுற்ற பிறகு, அரசால் அவை மேற்கொள்ளப்படும். எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடா்பும் இல்லை.

கடந்த ஆண்டில் ஏற்கெனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வாா்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com