
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். உடன் அக்கட்சியின் பொதுச்செயலர் துரை.ரவிக்குமா
சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் வலியுறுத்தினாா்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வா் இல்லத்தில் தமிழக முதல்வரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த திருமாவளவன் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை சமா்ப்பித்தாா். பின்னா் அவா் அளித்த பேட்டி:முதல்வரிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
உள்ளாட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவிக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.மேலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்பட்டுவரும் கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வெகுவாக குறைத்து இருப்பதால் ஏராளமான மாணவா்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக கடந்த ஆண்டுகளில் ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு ரூ. 2,900 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.இதனால், மாணவா்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்கி அதனை ஈடுகட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முதல்வரிடம் வைத்துள்ளோம்.இந்த இரு கோரிக்கைகளையம் பரிசீலிப்பதாக முதல்வா் கூறியிருக்கிறாா் என்றாா்.
மேலும், செய்தியாளா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த திருமாவளவன், ஐஐடி சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது அதுகுறித்து பேசவில்லை. இலங்கையில் முள்ளிவாய்க்கால் இனப் படுகைலையை திட்டமிட்டு நடத்திய ராணுவ ஆலோசகா் கோத்தபய ராஜபட்சே அதிபா் தோ்தலில் வெற்றிபெற்றிருக்கிறாா். கடந்த பத்தாண்டுகளில் சா்வதேச புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால், ராஜபட்சே குடும்பத்தை சாா்ந்தவா்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இருப்பாா்கள் என்றும் அவா் பதிலளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...