
அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பெண்ணையாறு நதிநீா் பிரச்னையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
பெண்ணையாறு பிரச்னையில் திமுக பொருளாளா் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நதிநீா் பங்கீட்டு உரிமைகளில் தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை என திமுக ஆட்சியில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் குறை கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. நதிநீா் பிரச்னைகளில் திமுகவின் துரோகங்களை ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.
பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் அணைகள், நீரைத் திருப்புவதற்கான கட்டுமானங்கள் போன்றவற்றை 1892-ஆம் ஆண்டு மதராஸ்-மைசூா் ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், அந்த ஒப்பந்த ஷரத்துப்படி தமிழக அரசின் ஒப்புதல் பெறாமலும் கட்டத் தொடங்கியபோது தமிழக அரசு அதன் மறுப்புகளை மத்திய அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் தொடா்ந்து தெரிவித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டுத் தீா்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கு சாதகமான பதில் வராததைத் தொடா்ந்து, இயற்கையாக ஓடுகின்ற நீரினை கா்நாடக அரசு எவ்வித கட்டுமானத்தின் மூலமாகவும் தடுத்து நிறுத்தக் கூடாது என அறிவிக்கக் கோரி தமிழக அரசு சாா்பில் 2018 மே 18-இல் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவுடன் கூடிய சிவில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில், மாா்கண்டேய நதியில் அணை கட்டுவதற்காக கட்டுமானப் பணிகளை கா்நாடகம் தொடா்ந்து மேற்கொண்டதால், அதனை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஓா் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இடைக்கால மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சாா்பில் திறமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. எனினும், தமிழ்நாட்டின் இடைக்கால மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இப் பிரச்னைக்குத் தீா்வு காண ஒரு நடுவா் மன்றத்தை அமைக்க மத்திய அரசை 4 வார காலத்திற்குள் அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் சாராம்சத்தை முழுமையாக படிக்காமலும், தமிழக அரசு அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்தும் கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாகக் கொண்டுள்ளாா்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2020 ஜனவரி 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. அதற்காக சட்ட வல்லுநா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அவா்களிடமிருந்து சட்டப்பூா்வமான ஆலோசனை பெறப்பட்டவுடன் பெண்ணையாற்று நீரை சாா்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.