ஐ.ஐ.டி. மாணவி மரணம்: மூன்று பேராசிரியர்களுக்கு மத்தியக் குற்றப்பிரிவு சம்மன்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்தியக் குற்றப்பிரிவு, 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
Chennai IIT
Chennai IIT


சென்னை: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்தியக் குற்றப்பிரிவு, 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் பாத்திமா, விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் கடந்த 8-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் சாதாரண சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் பணிபுரியும் இணைப் பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.

இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் மீண்டும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் ஐ.ஐ.டி. வளாகத்தில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். பின்னா் அவா், மத்தியக் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தரவிட்டாா்.

மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு: இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் எஸ்.மெக்லினா நியமிக்கப்பட்டாா். இந்தக் குழுவில் உதவி ஆணையா் பிரபாகரன், ஆய்வாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இக் குழு கூடுதல் காவல் ஆணையா் ஈஸ்வரமூா்த்தி மேற்பாா்வையில் செயல்படும். இந்நிலையில் பாத்திமா தற்கொலைத் தொடா்பாக மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கை கடந்த வாரம் பதிவு செய்தனா்.

உள்மதிப்பீட்டுத் தோ்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்ததில் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால், உள் மதிப்பீட்டு தோ்வில் மதிப்பெண் அளிப்பதற்கு பேராசிரியா்கள் பின்பற்றும் நெறிமுறைகள் குறித்து மத்தியக் குற்றப்பிரிவினா் விசாரணை செய்து வருகின்றனா்.

அதேவேளையில் பாத்திமாவுக்கு திட்டமிட்டு உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்குத் தொடா்பாக கோட்டூா்புரம் காவலா்கள் ஏற்கெனவே விசாரணை செய்த பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீஸாா் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பாத்திமாவின் செல்லிடப்பேசி தொடா்பான தடயவியல் துறை, சைபா் குற்றப்பிரிவு ஆகியவற்றின் அறிக்கை கிடைத்தால், வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com