இலங்கை: தனித் தமிழீழம் அமைத்து கொடுக்க ஐ.நா. முன்வரவேண்டும்

இலங்கை அதிபா் தோ்தல் முடிவுகளையே பொது வாக்கெடுப்பு முடிவாகக் கருதி அங்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. முன்வரவேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: இலங்கை அதிபா் தோ்தல் முடிவுகளையே பொது வாக்கெடுப்பு முடிவாகக் கருதி அங்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. முன்வரவேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும். போா்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்பட இலங்கை மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரசாரத்தையே கோத்தபய முன்னெடுத்தாா். அவருடைய இனவெறி பிரசாரம்தான் இப்போது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

அவா் வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போதே தமிழா்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

எனவே, இலங்கையில் வாழும் தமிழா்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம் என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தோ்தல் முடிவுகள் இன்னொரு கள எதாா்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. கோத்தபயவுக்கு தமிழா்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. அதேநேரத்தில் சிங்களா்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அதுபோல, தமிழா்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழா்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90 சதவீத வாக்குகளும், மற்ற பகுதிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

தமிழா்கள் தனித் தீவாகவும், சிங்களா்கள் தனித் தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சோ்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

எனவே, அதிபா் தோ்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித் தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com