கரும்புகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்!: தீர்வுக்காக காத்திருக்கும் விவசாயிகள்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கரும்பு வயல்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
கரும்புகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்!: தீர்வுக்காக காத்திருக்கும் விவசாயிகள்

விழுப்புரம்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் கரும்பு வயல்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நில ஆக்கிரமிப்புகளால் காடுகளின் பரப்பு குறைந்து வருகிறது. மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் அளவில் காடுகள், மலைகள், மரங்கள் என விலங்குகள் வாழ்விடத்துக்காக இருக்க வேண்டும். ஆனால், அவை குறைந்து வருவதால் வசிப்பிடமின்றியும், உணவுக்காகவும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களில் புகுந்து வருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட வனப் பகுதிகளில் வசித்து வரும் யானைகள் கூட்டம், அவ்வப்போது மலையடிவார கிராமங்களில் புகுந்து, அங்குள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்துகின்றன.

அதேபோல, காட்டுப் பன்றிகளும் விளைநிலங்களில் புகுந்து வேர்க்கடலை, கரும்பு, நெல் பயிர்களை சேதப்படுத்துவதும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை.

பலன் தராத இழப்பீடுகள்: விலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சராசரியாக கணக்கிட்டு ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த இழப்பீடும் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. காட்டுப் பன்றிகளைச் சுடுவதற்கு உள்ள தடையை நீக்கினால் மட்டுமே பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். "காட்டுப் பன்றிகள், குரங்குகள் போன்றவற்றை சுடுவது சட்டப்படி குற்றமாகும். மலையடிவார கிராமங்கள், விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் அந்த விலங்குகளை விரட்டிவிடும் வேலையை மட்டுமே செய்து வருகிறோம்' என்று வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், "ஒரு பகுதியில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 700 பேர் குறிப்பிட்ட விலங்கினத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டால், அந்த விலங்கினத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்று விதிகள் உள்ளன. பயிர் சேதத்துக்கு விலங்குகளை விரட்டி விடுவதைத் தவிர வேறு நடவடிக்கை எடுக்க முடியாது' என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயிர்களின் வரப்புகளில் வெள்ளைத் துணிகள், நெகிழிப் பைகளை கம்புகளில் கட்டி வைத்து, இரவில் மின் விளக்குகளை எரியச் செய்தும் விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிலர் மின் வேலிகளை அமைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

கரும்பு பயிர்களை காக்க தீர்வு: கரும்புப் பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற விழுப்புரம் அருகேயுள்ள அரசமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ்.மனோகரன் இயற்கை வழியில் தீர்வு கண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கரும்புப் பயிர்களில் வரும் காய்ந்த தோகையை எரிக்காமல் சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும், மண்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறேன். ஏக்கருக்கு 55 டன் கரும்பை அறுவடை செய்கிறோம். சர்க்கரை கட்டுமானம் 13.11 சதவீதம் உள்ளது. எங்கள் பகுதியிலும் காட்டுப் பன்றிகள் தாக்குதல் இருந்தது. வாய்க்கால், வரப்புகளில் பள்ளம் தோண்டியும், கரும்புகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்தது. மண்ணில் புதைந்திருக்கும் கோரை கிழங்குகளைத் தின்பதற்கும், மண் புழுக்களை சாப்பிடவும் காட்டுப் பன்றிகள் தரையில் துளையிடுகின்றன. நிலத்தைச் சுற்றி கம்பி வேலி போட்டும், புடவைகளை சுற்றியும், காட்டாமணக்கு வேலி அமைத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

2012-ஆம் ஆண்டில் கரும்புகளை வெட்டிய பிறகு, இதன் தாக்குதலை தடுப்பதற்காக இயற்கை வழியை ஏற்படுத்தியது நல்ல பயன் தந்தது.

அறுவடை செய்த கரும்பில் எஞ்சி நிற்கும் தோகையை எரிக்காமல், அப்படியே பயன்படுத்தினேன். கரும்புப் பயிர்களை வரிசையாக நட்டு, அந்த வரிசைகளின் இடைவெளியில் சுமார் 2 அடி உயரத்துக்கு தோகைகளை போட்டு வைத்தேன். இந்தத் தோகைகளைக் கடந்து செல்ல காட்டுப் பன்றிகள் அச்சப்பட்டு, வயலுக்குள் வராது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ஒரு ஏக்கர் கரும்பு வயலில் சுமார் 100 வரிசைகளில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தால், 50 வரிசைகளின் நடுவே தோகைகளை போட வேண்டும். மீதமுள்ள 50 வரிசைகளில் உரம் இடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் பணிகளை செய்யலாம்.

மேலும், தக்கைப் பூண்டு (பசுந்தழை உரம்) விதைகளை சீராக விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 15 கிலோ விதைகள் போதும். விதைத்தப் பிறகு மண்ணை மூடிவிட வேண்டும். கரும்புகள் மறுதாம்புகள் விட்ட 80-ஆவது நாளில் தக்கைப் பூண்டு 5 அடி உயரத்துக்கு பூக்களுடன் வளர்ந்து நிற்கும். இந்தச் செடியைப் பிடுங்கி, கரும்பின் இரண்டு கால்களிலும் மூடியபடி வைக்க வேண்டும்.

சுமார் 12 டன் கரும்புத் தோகைகளுடன், 5 டன் தக்கைப் பூண்டு பசுந்தாள் உரமும் சேர்ந்து இயற்கை இடுபொருளை கரும்புப் பயிருக்கு வழங்கும். தக்கைப் பூண்டின் வேர் முடிச்சுகள் உதவியால் காற்றிலிருந்து 50 கிலோ அளவில் தழைச்சத்துகளை கிரகித்து கரும்புப் பயிருக்கு வழங்குகிறது. இது 110 கிலோ யூரியாவுக்கு சமமாகும்.

தக்கைப் பூண்டு இலைகளில் இருந்து வெயில் மூலம், கரும்புக்குத் தேவையான குளுக்கோஸýம் தயாரித்து வழங்கும். இதனால், கரும்புப் பயிர் 3 மாதங்களில் 4 மாத வளர்ச்சியை அடையும்.

ஒரு ஏக்கர் கரும்பில் பாதியை கரும்புத் தோகையால் மூடுகிறோம். மீதமுள்ள பாதியில் தக்கைப் பூண்டு செடியால் மூடுவதால், காட்டுப் பன்றிகள் கரும்பு வயலுக்குள் வருவதற்கான வழிகள் அடைக்கப்படும். இதையும் மீறி காட்டுப் பன்றிகள் வந்து, மண்ணைத் தோண்ட முயன்றால், கீழே போட்டு வைத்துள்ள கரும்புத் தோகைகள் அவற்றின் மூக்கை கிழித்து சேதப்படுத்தும்.

மறு வரிசையில் பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடிகள் காய்ந்து காட்டுப் பன்றிகளின் உடம்பில் குத்துவதால், அவை வயலுக்குள் வராமல் ஓடிவிடும்.

அடுத்ததாக, கரும்பு வயலின் வாய்க்கால் இடைவெளியில் பன்றிகள் செல்ல முற்படுவதையும் தடுப்பதற்கு, வாய்க்கால் வரப்புகளில் கோ-3, கோ-4 ரகத்தின் தீவன பசும்புல்லை இரு பக்கமும் நட்டு வளர்த்து வருகிறேன். அது செழித்து வளர்ந்துள்ளதால், பன்றியால் அதனுள் செல்வதற்கும் வழியின்றி தடுக்கப்படுகிறது. பசுந்தீவனப்புல் வேர்களின் தடிமனான வளர்ச்சியால் பன்றிகள் தோண்டுவதற்கும் அச்சப்படுகின்றன. இந்த தீவனப்புல்லும் 3 டன் அளவில் கிடைத்து, மாடுகளுக்கு பயன்படுத்தலாம்.

கரும்புத் தோகை, தக்கைப் பூண்டும் இயற்கை உரமாவதால் உர செலவினங்களும் குறைகின்றன. களைகள் முளைப்பதில்லை. பூச்சிகளால் ஏற்படும் நோய்களும் இல்லை. தண்ணீர் பாய்ச்சினால் 15 நாள்கள் ஈரப்பதம் காக்கப்படுகிறது. இதனால், மண்புழு நுண்ணுயிரிகள் வளர்ந்து பயிருக்கும், மண்வளத்துக்கும் பலன் தருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com