கானல் நீராகும் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம்!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக விவசாயிகளின் பல ஆண்டுகால கனவான தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம்
கானல் நீராகும் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம்!

வேலூர்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக விவசாயிகளின் பல ஆண்டுகால கனவான தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் கானல் நீராக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள கொடியாளம் தடுப்பணை வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. தொடர்ந்து, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையை அடைகிறது. அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகத்தில் சுமார் 320 கி.மீ. தூரம் பாயும் தென்பெண்ணையாறு மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனிடையே, தென்பெண்ணை ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் அளிக்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2012-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதன் மீது விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை கட்ட தடையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டுகால கனவான தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை கானல் நீராக மாற்றியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஆண்டுக்கு 6.5 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதன் மூலம் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்படுவதுடன், விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும். இதற்காக நெடுங்கல் தடுப்பணையில் இருந்து சுமார் 45 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி கல்லாறு வழியாக வெலக்கல்நத்தம் பகுதியில் இணைக்கும் வகையில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாகும்.

இத்திட்டத்துக்கு கடந்த 2008-09-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மத்திய நீர்வள ஆதார அமைப்பு ரூ. 250 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த வலியுறுத்தியது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு: பின்னர், 2011-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மாநிலத்துக்குள் ஓடும் நதிகள் மாநில நிதியிலேயே இணைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, இத்திட்டம் செயல்படுத்தும் வழித்தடங்கள் குறித்து மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் சித்திக் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆனால், திட்டத்துக்கான வழித்தடம் குறித்த பிரச்னை உயர்நீதிமன்றம் வரை சென்றதால் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்காக மீண்டும் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கியது. இதற்கு விவசாயிகள் அதிர்ச்சி கலந்த எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நீர்வள ஆதார அமைப்பு ரூ. 648 கோடியில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை அப்போதையமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி செய்தார். ஆனால், அதன்பிறகும் இத்திட்டம் எவ்வித நடவடிக்கையுமின்றி மீண்டும் கிடப்பில்போடப்பட்டது.

இந்நிலையில்தான், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலர் ஏ.சி.வெங்கடேசன் கூறியது:

தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் 6.5 டிஎம்சி தண்ணீரில் 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாறுக்கும், 3 டிஎம்சி தண்ணீரை செய்யாறுக்கும் திருப்பி விடுவதற்காக தென்பெண்ணை-பாலாறு, தென்பெண்ணை-செய்யாறு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. ஆனால், இந்தத் திட்டங்கள் குறித்து தேர்தல் வரும் சமயங்களில் அறிவிப்பு வெளியாவதும், அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இவ்விரு நீர்செறிவூட்டும் திட்டங்களையும் முழுமையாக முடக்கியுள்ளது. இதனால், இதுவரை இந்தத் திட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்த வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

உடனடியாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டும். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை பாலாறு, செய்யாறு ஆகிய நதிகளுக்குக் கொண்டு வரும் இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றார் அவர்.

பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளர் ச.ந.ச.மார்த்தாண்டன் கூறியது:

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஒரு சொட்டு கூட தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டுவிடும். இதனால், கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, நெடுங்கல் தடுப்பணை, சாத்தனூர் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தடுக்கப்பட்டு 10 மாவட்டங்களின் பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படக்கூடும்.

எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் காலதாமதம் செய்யாமல் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டும் என்றார் அவர்.

இம்மாவட்டங்களின் நிலத்தடிநீரைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com