குன்னூரில் பலத்த மழை: 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

குன்னூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடித்துச்
குன்னூர் - கோத்தகிரி சிடிசி சாலையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அந்தரத்தில் தொங்கும் பங்களா.
குன்னூர் - கோத்தகிரி சிடிசி சாலையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அந்தரத்தில் தொங்கும் பங்களா.

குன்னூர்: குன்னூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடித்துச் செல்லப்பட்டன.  இந்த வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மிகப் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் பெயர்ந்து சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் 139 மில்லி மீட்டர்  மழை பெய்துள்ளது. 

பலத்த  மழையால் குன்னூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசுராம் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  தீயணைப்பு நிலைய சாலையில் உள்ள லாரி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட லாரிகள் சுமார் 50 அடிவரை இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் குறுக்கே நின்றதால் குன்னூர் - கோத்தகிரி சாலையில் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிடிசி சாலையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் பழைமையான பங்களா அந்தரத்தில் தொங்குகிறது. பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் விடியவிடிய மக்கள் அவதி அடைந்தனர்.

குன்னூர் - நான்சச் செல்லும் சாலையில் தேயிலைத் தோட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள்,  பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டப் பொறியாளர் குழந்தைவேலு தலைமையில் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநில நெடுஞ்சாலைத் துறை கூடுதல் இயக்குநர் பாரிஜாதம் தலைமையில் குன்னூர் - நான்சச் நெடுஞ்சாலையில்  5 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் விழுந்து கிடந்த மரங்கள்  அகற்றப்பட்டன.

கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குள் தண்ணீர் புகுந்தது. டேன் டீ குடியிருப்புப் பகுதியில் விபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருந்த பாறைகள் கோட்ட மேலாளர்  புஷ்பராணி உத்தரவின் பேரில் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மவுண்ட் பிளசன்ட் செல்லும் சாலையில் ஏற்கெனவே மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் மிகப் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சாலையில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார்

மேலும் மழை  தொடர வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், கன்னி மாரியம்மன் கோயில் தெரு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் மண் சரிவுகள், வெள்ள பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு 
செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com