தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியலே தமிழகத்துக்குத் தேவை: துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேச்சு

தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியலே தமிழகத்துக்குத் தேவை எனவும், அதற்கான பணிகளை துக்ளக் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும் அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழ் பொன் விழா சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆசிரியர் சோ எழுதிய நூல்களுடன் (இடமிருந்து) துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் புத்தகப் பதிப்பாளர் வி. சீனிவ
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழ் பொன் விழா சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆசிரியர் சோ எழுதிய நூல்களுடன் (இடமிருந்து) துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் புத்தகப் பதிப்பாளர் வி. சீனிவ

கும்பகோணம்: தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியலே தமிழகத்துக்குத் தேவை எனவும், அதற்கான பணிகளை துக்ளக் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும் அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டத்தில் அவர் பேசியது: தமிழகம் இருண்ட காலத்தில் இருந்தபோது பிரிவினைவாதம் மறைமுகமாகவும், நேரடியாகவும் தலைவிரித்து ஆடிய காலத்தில், அவற்றை திசை திருப்புவதற்காகவும், அதனை எதிர்த்து மக்களின் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவும் துக்ளக் தொடங்கப்பட்டது.

தமிழகத்தை இந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும், சரியான திசையில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட துக்ளக் 50 ஆண்டுகளைக் கடந்து சரித்திரம் படைத்திருக்கிறது.

ஆசிரியர் சோவுக்குப் பிறகு, என்னை ஆசிரியராக வேண்டும் எனப் பணித்தார். அதனை நான் ஏற்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, ஆசிரியர் சோவின் மறைவு என அடுத்தடுத்து நிகழ்வுகள், தமிழகத்தில் அதிமுக தலைமைக்கு யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், மக்களே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமை அதிமுகவில் அமைவதை விரும்பாத சூழலில் ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்றேன்.

தனக்குக் கிடைத்த புகழை நாட்டுக்காகவும், தர்மத்துக்காகவும், தெய்வீகத்துக்காகவும், தமிழகத்துக்காகவும், கலாசாரத்துக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் மட்டுமே ஆசிரியர் சோ பயன்படுத்தினார். தனக்கு என பயன்படுத்திக் கொள்ளாதவர். அவரால் தமிழ் எழுத்தாளராக உருவாக்கப்பட்டவன் நான்.

பொருளாதார உண்மை நிலை குறித்து தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தத் தமிழில் கட்டுரை எழுதுமாறு பணித்தார். அவசரக் காலத்திலும் நசிகேதன் என்ற புனைப்பெயரில் கட்டுரை எழுத பணித்தார். இந்த வகையில் எழுதத் தொடங்கிய நான் இப்போது துக்ளக் ஆசிரியராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

1979-ஆம் ஆண்டிலேயே ஆடிட்டர் பணியை விட்டுவிட்டேன். இன்னமும் என்னை ஆடிட்டர் என்றே பலரும் அழைக்கின்றனர். துக்ளக் ஆசிரியர் என அழைப்பதையே பெருமைப்படுகிறேன்.

தமிழகத்தில் தேசியத்துக்கு மரியாதை இன்னும் இருப்பது துக்ளக்கால் மட்டுமே. நாத்திகம் தலைவிரித்தாடியபோதும், தெய்வங்களை மோசமாகச் சித்தரித்து இந்துக்களைக் கேவலமாகப் பேசுவதும், மதச்சார்பின்மை எனக் கூறி திராவிட பாரம்பரியத்தை வளர்தெடுத்த நிலையில், அதற்கு மாற்றாக தேசியத்தையும், தெய்வீகத்தையும் தமிழகத்தில் வளர்த்தெடுக்கத் தனது எழுத்துகளை ஆயுதமாக்கியவர் ஆசிரியர் சோ.

தேசியமும், தெய்வீகமும் இணைந்ததுதான் நாடு. அத்தகைய அரசியல் இல்லாவிட்டால், அது கழகங்களின் அரசியலாகவும், குடும்ப அரசியலாகவும், லஞ்ச அரசியலாகவும், ஊழல் அரசியலாகவும் மட்டுமே இருக்கும். தெய்வீகம் கலந்த அரசியலை முன்னெடுத்து, ஆன்மிகச் சிந்தனைப் போரை 50 ஆண்டுகளாக துக்ளக் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கு அது இன்னும் தேவை. பிரிவினைவாதம் எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இந்து நாத்திக வெறியர்களுக்கு எதிரான போராட்டம், விடுதலைப்புலிகள் எதிர்ப்பு ஆகிய நிலையில் இருந்து விடுபடுவதும் இல்லை. விடுபட்டுச் செல்லப்போவதும் இல்லை என்றார் குருமூர்த்தி.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன்: துக்ளக் இதழ் 1970- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதலாமாண்டு நிறைவு விழா 1971 -ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில், ஏறத்தாழ 15,000 பேர் கலந்து கொண்டனர். மன்றம் அல்லது கட்சியை ஆசிரியர் சோ தொடங்கலாம் என அக்கூட்டத்தில் பங்கேற்ற தீபம் நா. பார்த்தசாரதி கூறினார். இதற்கு, மக்களுக்கு அறிவையும், சிந்தனையையும் ஏற்படுத்துவது மட்டுமே என ஆசிரியர் சோ பதிலளித்தார்.

அரசியல் இதழை வெற்றிகரமாக நடத்தியவர் ஆசிரியர் சோ. மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் பத்திரிகையை தொடங்கி நடத்தினார். அது, இப்போதும் தொடர்கிறது. அரசியல்வாதிகளின் குறைகளை மட்டுமல்லாமல், அவர்களுடைய நிறைகளையும் எடுத்துக் கூறியவர் ஆசிரியர் சோ.

சிட்டி யூனியன் வங்கி முதன்மைச் செயல் அலுவலரும், நிர்வாக இயக்குநருமான என். காமகோடி: தன்னலம் கருதாது தேசம்தான் முக்கியம் எனக் கருதியவர் ஆசிரியர் சோ. உண்மை, நேர்மையைப் பிரதானமாகக் கடைப்பிடித்த ஆசிரியர் சோ, அதை இயக்கமாகவே செயல்படுத்தினார் என்பது மிகையல்ல. ஆர்வத்துடன் கூடிய வாசகர் குழுவை உருவாக்கியவர் ஆசிரியர் சோ. தேசத்தின் நன்மைக்காகச் சிந்தித்தவர். அவரால் தேசத்தின் நலன் காப்பாற்றப்பட்டது. துக்ளக் இதழின் பலம், அதன் வாசகர்கள்தான்.

அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்: அரசியலில் மிக மோசமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, அதைத் தட்டிக் கேட்க, நமக்கு ஆசிரியர் சோவை இயற்கை தந்தது. ஆசிரியர் சோ பேசும்போது, கெளரவமான நகைச்சுவையுடன் பேசுவார்.

எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு எதிராக இருந்தார் ஆசிரியர் சோ. ஆனால், பின்னாளில் எழுத்து சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்த அவர், பிடிவாதம் பிடிக்காமல் அதை ஏற்றுக் கொண்டார்.

அரசியல் மட்டுமல்லாமல், ஆன்மிகத்தையும் பரப்பினார் ஆசிரியர் சோ. தேசியமும், ஆன்மிகமும் இரண்டையும் போற்றிய பத்திரிகை துக்ளக். அரசியல், ஆன்மிகம், நாடகம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் மேலோங்கி நின்றார் ஆசிரியர் சோ.

சமய இலக்கியச் சொற்பொழிவாளர் ப. மணிகண்டன்: ஆசிரியர் சோவின் நேர்மை பேச்சிலும், எழுத்திலும் மட்டுமல்ல, அதை அவர் சமூகத்துக்கு எடுத்து சொன்னார். எல்லா மொழிகளையும் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் ஆசிரியர் சோ. அவர் தேசியத்தையும், தெய்வீகத்தையும் பின்பற்றியவர். அரியணை ஏற ஆசைப்படாதவர்.

விழாவில், ஆசிரியர் சோ எழுதிய "அனுபவங்களும் அபிப்ராயங்களும்' "இவர்கள் சொல்கிறார்கள்' என்ற நூல்களை துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வெளியிட, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் சிறப்புரையாற்றினார். நிறைவாக துக்ளக் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com