வரி ஏய்ப்பு விவகாரம்: தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்ட்
By DIN | Published on : 19th November 2019 01:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வரி ஏய்ப்பு விவகாரத்தில் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு எழும்பூா் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முன்னணி கதாநாயகா்களை வைத்து 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவா் பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா. கடந்த 2007-08 மற்றும் 2008-09 ஆண்டுகளில் இவா், தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். அப்போது கிடைத்த ஆவணங்கள் மூலம் ஞானவேல்ராஜா தனது வருமானத்தை மறைத்து வருமான வரி தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா் மீது வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கு சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானாா்.
தற்போது குற்றச்சாட்டு பதிவுக்காக இந்த வழக்கு நீதிபதி மலா்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்குரைஞரும் ஆஜராகவில்லை. இதைத் தொடா்ந்து, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷீலா வாதாடினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டாா். பின்னா், வழக்கு விசாரணையை 27-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.