முதலமைச்சர் இல்லம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று புகார் அளித்தால் விசாரிப்பார்களா?: ஆர்.எஸ்.பாரதி கேள்வி

பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரது இல்லம் - தமிழக பா.ஜ.க. அலுவலகம் போன்றவை பஞ்சமி நிலத்தில் இருக்கிறது  என்று தி.மு.க. சார்பில் புகார் அளித்தால் விசாரிப்பார்களா? என்று திமுக... 
ஆர்.எஸ்.பாரதி எம்.பி
ஆர்.எஸ்.பாரதி எம்.பி

சென்னை: பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரது இல்லம் - தமிழக பா.ஜ.க. அலுவலகம் போன்றவை பஞ்சமி நிலத்தில் இருக்கிறது  என்று தி.மு.க. சார்பில் புகார் அளித்தால் விசாரிப்பார்களா? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரும் - திமுக அமைப்புச் செயலாளருமான  ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செவ்வாய் மாலை, சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ‘தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின்’ துணைத் தலைவர் முன்பு ஆஜராகி, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசன் அளித்த புகார் குறித்து தனது ஆட்சேபணையை எழுத்துப்பூர்வமாக அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் சார்பாக முரசொலி நிலம் சம்பந்தமாக சமன் அனுப்பப்பட்டு இன்று  19.11.2019 ஆஜராகும்படி சொல்லியிருந்தார்கள். அதனை ஏற்று தகுந்த ஆதாரங்களுடன் இன்றைக்கு ஆணையத்தின் முன்பு ஆஜரானோம்.  ஆனால் புகார் கொடுத்த டாக்டர்  சீனிவாசன் என்பவர் எனக்கு கால அவகாசம் வேண்டும்  என்று கேட்டிருக்கிறார். அதற்கு அடுத்து வந்த தலைமைச் செயலாளரும் தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர்கள் வாய்தா வாங்குவது எதை காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நான் அப்போது ஆணையரைப் பார்த்து, “வழியில் போகிற யார் வேண்டுமானாலும் புகார் கொடுத்தால் நீங்கள் விசாரித்து விடுவீர்களா? நான் கூட இப்போது பிரதமர் வாழ்கிற வீடு பஞ்சமி நிலத்திலே இருக்கிறது என்று சொல்வேன். நீங்கள் விசாரிப்பீர்களா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் வசிக்கிற இடம் பஞ்சமி நிலம் என்று சொன்னால் நீங்கள் விசாரிப்பீர்களா?” என்று கேட்டேன். “தமிழக பாஜக தலைமை அலுவலகம் இருக்கிற கமலாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்றால் அதை நீங்கள் விசாரிப்பீர்களா?” என்று எங்கள் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டார்.  அதற்கு அவரால் முறையாக எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

மேலும் “இது குறித்து விசாரிக்கிற அதிகாரமே  உங்களுக்கு  இல்லை. நாங்கள் எல்லாவிதமான ஆதாரங்களோடும் வந்திருக்கிறோம். எங்கள் மீது சீனிவாசன் புகார் சொன்னார். அவர் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் என்று கேட்டால், பதில் இல்லை! அரசாங்கத்தைப் பற்றி கேட்டீர்கள். அரசாங்கமும் வாய்தா வாங்கியிருக்கிறது. பஞ்சமி நிலமா இல்லையா? என்று தேடுவதற்கு அரசாங்கத்திற்கு ஒரே ஒரு மணி நேரம் போதும். ஆனால் நீங்கள் சம்மன் அனுப்பி எத்தனை நாட்கள் ஆகிறது. 'தேடுகிறார்கள்... தேடுகிறார்கள்... தேடிக் கொண்டே இருக்கிறார்கள்! இன்னுமா கிடைக்கவில்லை!'. ஆகவே போகிற போக்கில் ரோட்டில் போகிறவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லமுடியாது. ஆகவே உங்களுக்கு இதை விசாரிக்கிற அதிகாரமே இல்லை. சில விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதற்குரிய  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் கொடுத்திருக்கிறோம்.” என்று வலிமையாக எங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தோம்.

இன்றே இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நான் கருதுகிறேன். காரணம் என்னவென்று கேட்டால் ஆணையர் அவர்களுக்கு இதிலே தலையிடுகிற அதிகாரம் இல்லை என்றும் சொல்லி விட்டோம்.  அவரும் கால அவகாசம் வாங்கிவிட்டார். அதேபோல குற்றம் சாட்டிய சீனிவாசனும் வாய்தா வாங்கிவிட்டார். எங்களிடம் உள்ள ஆவணங்களைத் தயார் நிலையில் கொண்டு வந்தோம்.  ஆகவே, இதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது யார் பழி சுமத்தினாலும் அந்தப் பழியை போக்குவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டத்துறை வலிவோடு இருக்கிறது.

ஐந்து முறை எங்கள் தலைவர் கலைஞர் ஆட்சியிலே இருந்திருக்கிறார். ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட எங்கள் ஆட்சியின் மீது நிரூபிக்கப்படவில்லை. எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு!

“உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள். நாங்கள் உங்களைச் சந்திப்பதற்கு தயராக இருக்கிறோம்” என உங்கள் மூலமாக அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

எங்கள் மீதான குற்றச்சாட்டில் சீனிவாசன் மீது நாளைய தினம் அவதூறு வழக்கு போட போகிறோம். இந்த பிரச்சினையை முதன் முதலாக கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு போட இருக்கிறோம். அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலம் யார் யார் பெயரில் இருக்கிறது என்பது வழக்கு போடும் போது தெரியும். அவதூறு வழக்கு போடும் போது இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.

அவர்கள் ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வரத் தயராக இருக்கிறோம் என்று ஆணையரிடம் சொல்லிவிட்டு வந்தோம். எப்போதும் வரத் தயார் எந்த இடத்திற்கும் வரத் தயார். சென்னை அல்ல டெல்லிக்கு கூப்பிட்டாலும் வரத் தயார் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com