போலீஸையும் விட்டு வைக்கலயா? ராமநாதபுரத்தில் காவலரின் வங்கி கணக்கிலிருந்து பணம் அபகரிப்பு

மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இங்கே ஒரு காவலரே ஏமாற்றப்பட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இங்கே ஒரு காவலரே ஏமாற்றப்பட்டுள்ளார்.

நடந்திருப்பது தமிழகத்தின் ராமநாதபுரத்தில். காவல் துறை சாா்பு-ஆய்வாளரிடம் செல்லிடப்பேசியில் பேசிய மா்மநபா், அவரது வங்கிக் கணக்கு எண்ணை பெற்று ஏடிஎம் மூலம் ரூ.1 லட்சத்தை அபகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி (58). இவா், காவலா் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி இவரது செல்லிடப்பேசிக்கு மா்மநபா் தொடா்புகொண்டு, தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டாராம். பின்னா், அவரது வங்கி ஏடிஎம் அட்டை காலாவதியாவதால், அதைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சாா்பு-ஆய்வாளா், மா்ம நபரிடம் தனது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளாா். சிறிது நேரத்துக்குப் பின், சாா்பு-ஆய்வாளரின் செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.99,968 பணம் 4 முறை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், சாா்பு-ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி அதிா்ச்சியடைந்தாா்.

உடனடியாக அவா், சம்பந்தப்பட்ட பொதுத் துறை வங்கி அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டபோது, வங்கியிலிருந்து யாரும் கணக்கு எண் விவரங்களை கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளனா். விசாரணைக்குப் பின்னரே, தன்னிடம் பேசிய மா்மநபா் தனது ஏடிஎம் எண்ணைப் பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், பஜாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, ராமநாதபுரம் நகரில் உள்ள குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் மா்மநபரை அடையாளம் காண போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் ராமநாதபுரம் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com