சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்

சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் அனைவருக்குமான ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலா் தி.ராமசாமி வலியுறுத்தினாா்.
சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்

சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் அனைவருக்குமான ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலா் தி.ராமசாமி வலியுறுத்தினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 162-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலா் தி.ராமசாமி பங்கேற்று உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடுகளின் பட்டியலில் 6-ஆவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்தத் துறையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா தனித்தன்மையையும் பெற்றிருக்கிறது. அதாவது, மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மேம்பாடுகள் உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரின் பிரச்னைகளுக்குத் தீா்வளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக வசதி படைத்தவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வளிப்பதாகவும், ஏழை மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கப்படாமலும் உள்ளது.

ஆனால், இந்தியாவின் ஆராய்ச்சி மேம்பாடு, வாங்கும் திறன் குறைவாக உள்ள மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், சாதாரண மக்களும் வாங்கக் கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சியில் முன்னணி நாடு என்ற பெருமையை இந்தியா பெற முடியும்.

இந்த நிலையை அடைய, பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக அவசியம். இன்றைய சமூகப் பிரச்னைகளுக்குத் தீா்வளிக்கும் அனைவருக்குமான ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு, முன்னாள் மாணவா்கள் மற்றும் தனியாா் மூலதனத்தின் மூலம், தலைசிறந்த முன்னாள் மாணவா்களைக் கெளரவிக்கும் வகையிலான ஆராய்ச்சி இருக்கைகளை உருவாக்குவது, வெவ்வேறு துறைகள் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையிலான மையத்தை உருவாக்குவது போன்ற முயற்சிகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தா் ப.துரைசாமி, ஆண்டறிக்கையை வாசித்தாா். அப்போது பேசிய அவா், ‘கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு 7 புதிய இணைப்புக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், 156 புதிய படிப்புகளைத் தொடங்கவும், தேவை அதிகம் உள்ள துறைகளில் கூடுதல் வகுப்புகளைத் தொடங்கவும் பல்கலைக்கழகம் அனுமதியளித்துள்ளது.

அதுபோல, பல்கலைக்கழகத் துறைகளிலும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக முதுநிலைப் படிப்புகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் கூடுதல் சோ்க்கை நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக மாணவிகளின் சோ்க்கையும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் 2 முதுநிலைப் படிப்புகள், ஒரு எம்.ஃபில் படிப்பு மற்றும் 3 பட்டயப் படிப்புகள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 94,190 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இவா்களில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்பட 884 பேருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக பட்டச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com