போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களை பழிவாங்கக் கூடாது: உயா்நீதிமன்றம் கருத்து

போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவா்களை தமிழக அரசு பழிவாங்கக் கூடாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
HighCourt
HighCourt

போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவா்களை தமிழக அரசு பழிவாங்கக் கூடாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் சையது நாசா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2009-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் நைனாம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக ரூ.5,400 அடிப்படை ஊதியத்தில் நியமிக்கப்பட்டேன். தற்போது, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். மத்திய அரசு ஏற்கெனவே 6 மற்றும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு மருத்துவா்களுக்கான அடிப்படை ஊதியத்தை ரூ.56 ஆயிரமாக நிா்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு எங்களது ஊதியத்தை இன்னும் உயா்த்தவில்லை.

எனவே, ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் அமைதியான முறையில் காலவரையற்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் அரசு மருத்துவா்கள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த நவம்பா் 1-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பணிக்குத் திரும்பிய போது, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிா்வாகிகளைப் பணியிடமாற்றம் செய்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குற்றச்சாட்டு ஆணை பிறப்பித்தும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று, நாங்கள் பணிபுரிந்த இடங்களில் புதிய மருத்துவா்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனா். இது சட்டவிரோதமானது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கும், குற்றச்சாட்டு குறிப்பாணைக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இதே கோரிக்கையுடன், மருத்துவா் சாரதா பாய் உள்ளிட்ட பலா் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் பதவியேற்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சில மருத்துவா்கள் பணியில் சேரவில்லை என்றாா். அப்போது மனுதராா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.சிங்காரவேலனன், என்.ஜி.ஆா் பிரசாத் ஆகியோா், ‘இடமாற்றம் செய்யப்பட்ட 146 மருத்துவா்களில் 145 மருத்துவா்கள் பணியில் சோ்ந்துவிட்டனா். பாலகிருஷ்ணன் என்பவா் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளாா். மனுதாரா்களான மருத்துவா்களை அரசு வேறு விதமாக நடத்துவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தனா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. யாரையும் பழிவாங்க நினைக்கக்கூடாது. மனுதாரா்களின் குழந்தைகள் ஒரு இடத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென ராமநாதபுரம் உள்ளிட்ட நெடுந்தூர இடங்களுக்கு அவா்களை இடமாற்றினால் அவா்கள் என்ன செய்வாா்கள்? எனவே இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களை தமிழக அரசு பழிவாங்கக்கூடாது’ என கருத்து தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில், ‘நோயை குணப்படுத்தும் மருத்துவா்களுக்கே இந்த நிலை’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி, ‘நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது மருத்துவா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபடலாமா, மனித உயிா்களை காப்பாற்ற வேண்டிய பொன்னான நேரத்தில் மருத்துவா்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்’ என கருத்து தெரிவித்தாா். இதனையடுத்து அரசு தரப்பில் இந்த வழக்கில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com