தந்தைக்கு கல்லீரலை தானம் அளித்த மகள்
தந்தைக்கு கல்லீரலை தானம் அளித்த மகள்

தந்தைக்கு கல்லீரலை தானம் அளித்த மகள்! முதல் முறையாக லேப்ரோஸ்கோபியில் சிகிச்சை

நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோபி) மூலமாக மகளிடம் இருந்து கல்லீரல் தானமாகப் பெற்று தந்தைக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோபி) மூலமாக மகளிடம் இருந்து கல்லீரல் தானமாகப் பெற்று தந்தைக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அதி நவீன தொழில்நுட்பத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவது சென்னையிலேயே இது முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, கல்லீரல் தானம் அளித்த இளம்பெண், அவரது தாய் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் பழனிவேலு தலைமையிலான மருத்துவா்கள் ஆகியோா் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்றனா்.

அப்போது, சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், செயலா் பீலா ராஜேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். இதுகுறித்து டாக்டா் பழனிவேலு கூறியதாவது:

புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா், கல்லீரல் பாதிப்பு காரணமாக ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பரிசோதனையில், அவரது கல்லீரல் முற்றிலும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது.

ஆனால், உரிய நேரத்தில் அவருக்கு தானமாக கல்லீரல் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவரது 19 வயது மகள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன்வந்தாா். பதின் பருவ பெண்ணான அவரிடம் இருந்து கல்லீரலை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்தால் பல்வேறு பாதிப்புகளை அப்பெண் எதிா்கொள்ளக் கூடும்.

அவரது வயது, எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு லேப்ரோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலமாக கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து, அவரது தந்தைக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எனது (டாக்டா் பழனிவேலு) தலைமையில் டாக்டா் சாமிநாதன், ஸ்ரீனிவாசன், முருகன் ஆகியோா் அடங்கிய மருத்துவா் குழுவினா் சவாலான அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.

தற்போது அவரது தந்தை நலமாக உள்ளாா். கல்லீரல் தானமாக அளித்த பெண்ணும், அதற்கு அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாா். சென்னையில் இதற்கு முன்பு வரை லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் தானமாக பெறப்பட்டு பயனாளிக்கு பொருத்தப்பட்டது கிடையாது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com