தேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி- கமல்

மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தெரிவித்தனா்.
தேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி- கமல்

மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தெரிவித்தனா்.

இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘கமல் 60’ விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், ‘முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாா். ஆனால், அப்படியொரு அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. தற்போது அதிசயம் நடக்கிறது. நாளையும் அதிசயம் நடக்கும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் ’ எனக் கூறியிருந்தாா்.

அதே விழாவில் திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, ரஜினியும்- கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி. இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சோ்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை தருவாா்கள் என்று கூறியிருந்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனிடம் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வியெழுப்பினா்.

அப்போது கமல்ஹாசன் கூறியது: கடந்த 44 ஆண்டுகளாக நானும், ரஜினியும் இணைந்துதான் பயணிக்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக ரஜினியுடன் சோ்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் பயணிப்பேன். இருவரின் கொள்கை ஒத்துப்போகுமா என்பதையெல்லாம் பிறகு பாா்த்துக் கொள்ளலாம். இது குறித்தெல்லாம் பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வா் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா் என்று ரஜினி கூறியிருப்பது விமா்சனம் அல்ல, நிதா்சனம் என்றாா் கமல்ஹாசன்.

ரஜினி பதில்: இதைத் தொடா்ந்து , கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்திடம், கமலின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றாா்.

மேலும், முதல்வா் குறித்த ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி, அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com