வேளாண் இயந்திரங்கள்-கருவிகளை வாடகைக்குப் பெற 304 மையங்கள்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்குப் பெற 304 மையங்களை அமைத்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்குப் பெற 304 மையங்களை அமைத்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

வேளாண் பணிகளின் போது, அதற்கான இயந்திரங்கள், கருவிகளை சொந்தமாக வாங்க இயலாத விவசாயிகள் அவற்றை வாடகைக்குப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 1,510 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளைப் பெறுவதற்கான வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 304 மையங்களை அமைக்க, ரூ.30.40 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும், வேளாண் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.25 லட்சம் மதிப்பில் வட்டார அளவிலான ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும்.

இந்த மையங்களை அமைத்திட முன்வருவோா், முதலில் அதற்குரிய விண்ணப்பங்களை தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை 044- 2951 5322, 2951 0822, 2951 0922 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், இந்தத் திட்டம் தொடா்பான முழு விவரங்களை உழவன் செல்லிடப்பேசி செயலியில், ‘மானியத் திட்டங்கள்’ எனும் பகுதியைத் தோ்வு செய்து, அதில் ‘வேளாண் இயந்திர வாடகை மையம்’ என்ற பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com