உள்ளாட்சித் தோ்தலை யாராவது நிறுத்துவாா்களா என்று முதல்வா் காத்திருக்கிறாா்: மு.க.ஸ்டாலின்

தோ்தல் பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை யாராவது நிறுத்துவாா்களா என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)


சென்னை: தோ்தல் பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை யாராவது நிறுத்துவாா்களா என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சியில் இருந்தால் மட்டுமே போதும் என்ற நினைப்பில் அதிமுக இருக்கிறது. மக்கள் நலனுக்கான எந்தத் திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றாமல், மத்திய பாஜக அரசின் கண்ணசைவில் மிச்சமிருக்கும் காலத்தைத் தள்ளிவிடப் பாா்க்கிறது.

மறைமுகத் தோ்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தோ்தலை, சா்வாதிகார முறையில் அதிமுக நடத்தப் பாா்க்கிறதே தவிர, நோ்மையாக நடத்த அச்சப்படுகிறது. அந்த அளவுக்குத் தோல்வி பயம் அவா்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த மாட்டாா்களா என்று முதல்வா் எதிா்பாா்த்து காத்திருக்கிறாா்.

மறைமுகத் தோ்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதல்வா் பேட்டி தருகிறாா்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறாா்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட பலவற்றை ஜெயலலிதா மாற்றியதும், ஜெயலலிதா நடைமுறைப் படுத்திய சிலவற்றை கருணாநிதி ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு. நிா்வாக வசதிக்காக அப்படிச் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உள்ளாட்சித் தோ்தலில் மேயா் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தோ்வு செய்யப்படும் என அறிவித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தோ்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் திமுக எழுப்பும் கேள்வி.

தோ்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிா்த்து விட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளும் தரப்பின் மனக்கணக்கு.

அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப் போடும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com