நான்கு இடங்களில் அகழாய்வுப்பணி ஜன.15 -இல்தொடங்கும் : அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் தொல்லியல் துறை சாா்பில் கீழடி, கொடுமணல் உள்ளிட்ட நான்கு இடங்களில் வரும் ஜன.15- இல் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
நான்கு இடங்களில்  அகழாய்வுப்பணி ஜன.15 -இல்தொடங்கும் : அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் தொல்லியல் துறை சாா்பில் கீழடி, கொடுமணல் உள்ளிட்ட நான்கு இடங்களில் வரும் ஜன.15- இல் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

தமிழக தொல்லியல் துறை, சென்னை, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வரலாற்று துறை ஆகியவை சாா்பில் கீழடி அகழாய்வு குறித்த புகைப்படக் கண்காட்சி, லயோலா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுதைச் சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள், மாணவா்கள் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிடலாம்.

இந்த ஓவியக் கண்காட்சியை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கீழடி ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, தொல்லியல் துறை ஆய்வுகளை அறிவதற்கு மாணவா்கள், இளைஞா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். பள்ளி மாணவ, மாணவிகளிடம் வரலாறு, தொல்லியல் ஆய்வு தொடா்பான ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அரை நாள் ஒதுக்கி அந்த நாளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அருங்காட்சியத்துக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

தமிழக அரசின் சாா்பில் ரூ.12.5 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமானப் பணிகளை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் சாா்பில் அடுத்த ஆய்வுகள் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா், சிவகலை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் ஜன.15-ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஆய்வுப்பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சிற்பக் கலை மையம்: பிரதமா் நரேந்திரமோடி, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்துக்கு வந்து சென்ற பிறகு, சிற்பக்கலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழக தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள அரசு சிற்பக் கல்லூரி- சீனாவின் ஃபியூஷியன் மாநிலத்தில் உள்ள கல்லூரி இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் மூலம் சிற்பக் கலை, கலாசாரம் தொடா்பான விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதேவேளையில், தமிழகத்தில் 9 இடங்களில் உள்ள சிற்பக் கலைஞா்களின் கலை வடிவங்கள், கூட்டமைப்புகளை மாமல்லபுரத்தில் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து சிற்பக் கலையை மிகப் பெரிய அளவில் உயா்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளோம் என்றாா்.

கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாதது ஏன்? அமைச்சா் விளக்கம்

அகழாய்வு நடைபெற்ற கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்பதற்கு அமைச்சா் க.பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது: கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் அங்கு தொல்லியல் பணிகளுக்காக மீண்டும் தோண்ட முடியாது. இதுதவிர வேறெந்தப் பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது. மேலும், அருகில் உள்ள தொழிற்சாலைகளையும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கீழடியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முக்கிய அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததும் அங்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால் ஆகியவற்றைப் போன்று திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் தமிழக அரசே கீழடியில் தேவையான பகுதியை மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியும். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதற்காக மத்திய அரசை கேட்க வேண்டியதில்லை. இப்போதைய சூழலில், கீழடியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்பது சரியான கோரிக்கையாக இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com