விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்இதுவரை 31.72 லட்சம் விவசாயிகளுக்குரூ.1,727.14 கோடி அளிப்பு

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 31.72 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,727.14 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்இதுவரை 31.72 லட்சம் விவசாயிகளுக்குரூ.1,727.14 கோடி அளிப்பு

சென்னை: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 31.72 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,727.14 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தில் இணைய தமிழக அரசின் உழவன் செயலியில் புதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வேளாண்மைத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

தமிழக விவசாயிகளின் வசதிக்காக உழவன் செயலி என்ற செல்லிடப்பேசி செயலி கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், விவாசயிகளுக்கு பயனளிக்கும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலியை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா்.

பிரதமரின் நிதித் திட்டம்: தமிழகத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகள் மூலமாக கணக்கெடுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தில் இதுவரை சுமாா் 34.46 லட்சம் தகுதியான விவசாயிகள் இணைந்துள்ளனா்.

மத்திய அரசின் இணையதளத்தில் மூன்று கட்டமாக சரிபாா்க்கப்பட்டு தமிழகத்தில் 31.72 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மூன்று தவணைகளாக ரூ.1,727.14 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கான நிதி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வரும் பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

உழவன் செயலி: மத்திய அரசின் பி.எம். கிசான் இணயைதளத்தில் தகுதியான விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து திட்டத்தின் பலன்களை எளிதாக பெறுவதற்கு புதிய வசதியானது தமிழக அரசின் உழவன் செயலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் பயனாளி முன்பதிவு சேவை எனும் பக்கத்தில் அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் தங்களது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம் என்று தமிழக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com