
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் பொது சுகாதாரத் துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசுகிறார் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின
மதுரை: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருப்பதைப்போல, இந்திய நாட்டின் தனித்துவம் ஆன்மிகம் என்று மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதாரச் செவிலியர் சங்கத் தலைவர் பா. நிர்மலாவின் 37 ஆண்டுகள் அரசுப் பணி நிறைவு விழா, கிராம சுகாதாரச் செவிலியர் சங்கத்தின் 35-ஆவது ஸ்தாபக தினம், சுகாதாரத் துறை செவிலியர் கூட்டமைப்பின் 15-ஆவது ஸ்தாபக தினம் ஆகிய முப்பெரும் விழா மதுரை வர்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் வழங்கிய ஆசியுரை:
உலகில் ஏராளமான சமயங்களும் மதங்களும் உள்ளன. "மதம்' என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு கொள்கை என்று அர்த்தம். தமிழில் அதையே சமயம் என சொல்கிறோம். சமைப்பது அல்லது பக்குவப்படுத்துவது என்று அதற்குப் பொருள். சமயம் மனிதர்களைப் பக்குவப்படுத்தும். அது மிருக நிலையில் இருப்பவர்களை மனித நிலைக்கும், மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கும் உயர்த்தும்.
ஒவ்வொரு மரத்திற்கும், பூவுக்கும் தனித்தனி குணம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. பொருளாதாரம் ஒரு நாட்டின் தனித்துவமாக இருக்கும். அறிவியல் வளர்ச்சி இன்னொரு நாட்டின் தனித்துவமாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் தனித்துவம் ஆன்மிகம்.
எத்தனையோ கடவுள்கள், எத்தனையோ வழிபாட்டு முறைகள் இருந்தாலும் கடவுள் ஒருவரே என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறிப்பிட்டார். சிகாகோவில் பேசிய விவேகானந்தர், "ஆறுகள் வளைந்து நெளிந்து ஓடினாலும், நேராக ஓடினாலும் கடைசியாக அது கடலை சென்றடைகிறது. அதேபோலதான் மனிதர்களின் வழிபாடுகள் அனைத்தும் இறைவன் ஒருவனையே சென்றடைகிறது' என்றார்.
பகவத் கீதையிலும் கிருஷ்ணர் இதையே குறிப்பிட்டு சொல்கிறார். இதேதான் ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் மதநல்லிணக்கதோடும், உதவும் மனப்பான்மையோடும் மனிதர்கள் வாழவேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.
தன்னிடம் இருக்கும் ஆற்றலை சமூகத்துக்குப் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும். அத்தகைய பணியை செவிலியர்கள் செய்து வருகின்றனர். அவர்களது சேவை பாராட்டுக்குரியது என்றார் சுவாமி கமலாத்மானந்தர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன்: தமிழகத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில் தமிழன் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. அவன் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகத்தோடும் எழுத்தறிவோடும் வாழ்ந்தவன் என்பதை அறியமுடிகிறது.
அதற்குச் சான்றாக இன்றளவும் எத்தனையோ கோயில்கள், சிலைகள் இருக்கின்றன.
எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட இக்காலத்தில் கட்டப்படும் பாலங்கள் சில காலத்திலேயே இடிந்து கொண்டிருக்கின்ற நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்கள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன.
மதுரையில் இருந்து கிரேக்கத்திற்கு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தான் தமிழன் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பல சிறப்புகளை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு பின்னர் ஏன் இந்த இடைவெளி தமிழர்களுக்கு என்ன ஆனது எனக் கேள்வி எழுகிறது. அதை கண்டறிய வேண்டும்.
தன்னலமற்ற மனிதர்களுக்கு வரலாற்றில் தனி இடம் உள்ளது. அதில் கிராம சுகாதாரச் செவிலியர் சங்கத் தலைவர் நிர்மலா கண்டிப்பாக இடம்பெறுவார்.
பழனி சார்-ஆட்சியர் மருத்துவர் உமா: தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இவற்றில் பணியாற்றும் கிராமப்புற சுகாதாரச் செவிலியர்களின் சிறப்பான பணியின் காரணமாக, தமிழகத்தில் பேறுகால சிசு மரணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
அதேபோல தாய் - சேய் நலம் பேணுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
அரசுக்கும் மக்களுக்கும் எவ்வித சிக்கலும் ஏற்படாமல், பணிகளில் தொய்வு இல்லாத வகையில் சிறப்பான பணியை கிராமப்புற சுகாதாரச் செவிலியர் சங்கம் செய்து வருகிறது.
அரசுப் பணியில் 37 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, கிராமப்புற செவிலியர்களுக்காக சங்கத்தை ஏற்படுத்தி, அதை தமிழக அளவில் பெரும் அமைப்பாக உருவாக்கியிருக்கும் சங்கத்தின் தலைவர் நிர்மலாவின் பணி பாராட்டுக்குரியது என்றார்.
ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, சங்கத்தின் பொதுச்செயலர் அ. பாப்பா, மாநிலத் துணைத் தலைவர் ரெமா, இணைச் செயலர்கள் லதா மங்கையர்க்கரசி, அந்தோணியம்மாள், அமைப்புச் செயலர் இருதயமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.