Enable Javscript for better performance
கி.பி. 8-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    கி.பி. 8-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

    By DIN  |   Published on : 25th November 2019 06:26 AM  |   அ+அ அ-   |    |  

    stoneage


    திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ப.தரணிதரன், அபிமன்யு ஆகியோர் கந்திலி பகுதியில் உள்ள நரியனேரியில் கழுமரம் ஏறிய அரசனின் நடுகலை கண்டெடுத்தனர். 

    இது குறித்து உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு கூறியது:

    திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரியனேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் விவசாய நிலத்தின் நடுவில் பழைமையான நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் உள்ளது. 

    இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது இடது கை மார்பிலும், வலது கை மேல்நோக்கி உயர்த்தியவாறும் உள்ளன. தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவரை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகிறது.

    கல்லின் இடதுபுறத்தில் நின்ற நிலையில் பெண், எரியும் விளக்கை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. 

    கழுமரம்: கழுமரம் என்பது ஒரு கொலைக் கருவி. மன்னிக்க இயலாத பெருங்குற்றம் புரிவோர்க்கு இத்தண்டனை வழங்கப்படும் அல்லது செய்த குற்றத்துக்குப் பொறுப்பேற்றுத் தாமே கழுமரம் ஏறுவதும் உண்டு. கழுவில் பல வகைகள் உண்டு. செங்குத்தான கழுமரம், அமர்ந்த நிலையில் ஏற்றும் கழுமரம். குற்றம் புரிந்தோரைக் கழுவின் முனையில் எண்ணெயைத் தடவிக் குற்றவாளியைப் பிடித்து அவனது ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து செருகிவிடுவார்கள். 

    உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏறி குற்றவாளி இறந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.

    நரியனேரியில் காணப்படும் இக்கழுமரத்தில் உள்ளவன் ஆளும் தகுதி படைத்த சிற்றரசனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். 

    மிகப்பெரிய குற்றத்தைச் செய்ததற்குப் பொறுப்பேற்ற அவ்வரசன் தாமே முன்வந்து கழுவேறி உயிர் துறந்திருக்கக்கூடும். இல்லை என்றால் வேறு ஒரு வலிமை வாய்ந்த அரசனின் ஆளுகைக்கு உள்பட்ட ராஜ்ஜியத்தில் அவனுக்குக் கீழ் ஆட்சி செய்த இச்சிற்றரசன் செய்த குற்றத்துக்காக கழுவேற்றப்பட்டிருக்கலாம். 

    எப்படி இருப்பினும் கழுமரத்தில் உயிர்துறந்த சிற்றரசன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவனாக இருக்கக்கூடும். ஆகவேதான் அந்நிகழ்வை இக்கல்லில் சிற்பமாக வடித்து மக்கள் வணங்கி வந்துள்ளனர்.

    இத்தகவலை உறுதி செய்து இக்கல்லின் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குநர் ர.பூங்குன்றன், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சேகர் ஆகியோர் உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp