
பெரம்பலூர்: மரச்சிற்பக் கலையை காப்பாற்றவும், அதை தொடர்ந்து வளர்ச்சி பெறச் செய்யவும் புவிசார் குறியீடு கிடைக்க அரசு உதவ வேண்டும் என மரச்சிற்பக் கலைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்றளவும் வீடு, வணிக வளாகங்களில் அழகை மெருகூட்டுவதில் சிற்பங்களுக்கு ஈடு, இணை ஏதுமில்லை. குறிப்பாக, ஒரு அறையை அல்லது அரங்கை அழகுபடுத்துவதில் மரச்சிற்பங்களுக்கு பிரதான இடமுண்டு. இதனால், மரச்சிற்ப கலைஞர்களின் கலை நயமிக்க சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள தழுதாழை கிராமத்தில் மரச்சிற்பங்களை நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் வடிவமைக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உருவாக்கப்படும் மரச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படும் பூவரசு, விலங்கை, பூவாகை, அத்தி மற்றும் தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்களைக் கொண்டு செதுக்கப்படுகின்றன.
அரும்பாவூர், தழுதாழையில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள், கலைப்பொருள்கள் கண்காட்சிகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
சாமி சிலைகள், தேர்கள்...: தழுதாழையில் 1 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாஜலபதி உள்ளிட்ட சிலைகளும், வீடு, வணிக வளாகங்களுக்குத் தேவையான கலைநயமிக்க அலங்கார சிற்பங்களும் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல, கோயில்களுக்கு கலை நயமிக்க தேர்களும் செய்து வழங்கப்படுகின்றன. இங்கு ஒன்றரை அடி முதல் 10 அடி உயரம் வரையில் உருவாக்கப்படும் மரச் சிற்பங்கள், அவற்றின் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் சிற்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு செதுக்கப்படும் சிற்பங்கள் புதுச்சேரி, சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளன.
தொழில் பின்னடைவும், புத்துயிர் பெறுதலும்: அண்மைக்காலமாக சிற்பக் கலை கணினி மயமானதால் தழுதாழை மரச் சிற்பங்களுக்கு மவுசு குறைந்து, இத்தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான கலைஞர்கள் மாற்றுத்தொழிலுக்கு சென்றதால், சொற்ப எண்ணிக்கையிலான கலைஞர்களே சிலை செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தழுதாழை மரச்சிற்ப கலை நலிவடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் புகைப்படத்தில் இருக்கும் உருவத்தை மனதில் நிறுத்தி, கவனமாக உற்று நோக்கி, உளியில் ஓவியம் படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அரும்பாவூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வாசு (27). 2014-இல் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் படிப்பு முடித்தவர். சிறு வயது முதலே தனக்கு விருப்பமான மரச்சிற்பம் செய்வதில் ஆர்வத்தை செலுத்தி வந்த வாசு, படித்து முடித்தவுடன் மரச்சிற்பம் செய்யும் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்.
பொதுவான மரச்சிற்பத்துக்கு தற்போது வரவேற்பு இல்லை என்பதை உணர்ந்த அவர், மனித உருவங்களை மரச்சிற்பமாக செதுக்குவதில் ஆர்வம் காட்டினார். அதன்படி, மனித உருவங்களை சிலையாக செதுக்கி தனது முகநூலில் பதிவேற்றம் செய்தார். இதையறிந்த பலர், அவர்களது புகைப்படங்களை அனுப்பி சிலையாக செதுக்கித் தருமாறு தெரிவித்தனர். சுவாமி சிலைகள் செதுக்குவதை விட இது சிரமம் என்றாலும், தனது இடைவிடாத முயற்சியை கைவிடாமல் மனித உருவங்களை கலை நயத்தோடு செதுக்கி வருகிறார் வாசு.
இந்த சிற்பங்கள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளதால், சுணக்கத்தில் இருந்த மரச்சிற்பப் பணிகள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள அவர் கூறியது:
புவிசார் குறியீடு கிடைத்தால், தாங்கள் மேற்கொள்ளும் வடிவமைப்பை மரச்சிற்பக் கலைஞர்களைத் தவிர பிறர் பயன்படுத்த முடியாது. தங்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கும்.
எனவே, புவிசார் குறியீடு கிடைக்க அரசு உதவ வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல மரச்சிற்பக் கலைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும் என்றார்.