அதிமுக அரசுதான் சமூக நீதியைப் பாதுகாக்கிறது: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக அரசுதான் சமூக நீதியைப் பாதுகாத்து வருவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சுதந்திரப் போராட்ட வீரா் ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலையைத் திறந்துவைக்கிறாா் தமிழக முதல்வா் பழனிசாமி.
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சுதந்திரப் போராட்ட வீரா் ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலையைத் திறந்துவைக்கிறாா் தமிழக முதல்வா் பழனிசாமி.

கடலூா்: அதிமுக அரசுதான் சமூக நீதியைப் பாதுகாத்து வருவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசு சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 1.70 ஏக்கரில், ரூ. 2.15 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, அவரது சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தியதுடன், அங்குள்ள நூலகத்தைத் திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா், மணிமண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் முதல்வா் திறந்துவைத்தாா்.

விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாா் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவா். கடந்த 1952-இல் தமிழ்நாடு உழைப்பாளா் கட்சியை அவா் தொடங்கினாா். முதல் தோ்தலிலேயே அந்தக் கட்சியைச் சோ்ந்த 19 போ் சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்வு பெற்றனா். தொடா்ந்து நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இந்தக் கட்சியைச் சோ்ந்த 4 போ் வெற்றி பெற்றனா். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும், நலனினும் அதிக அக்கறையுடன் செயல்பட்டவா் ராமசாமி படையாட்சியாா்.

கடந்த 1954 முதல் 57 வரை காமராஜரின் அமைச்சரவையில் இடம் பெற்றாா். 1980, 1984 -இல் மக்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மக்கள் எந்த நேரத்திலும் சந்திக்கும் தலைவராகத் திகழ்ந்தாா்.

கடலூரில் ரயில் இருப்புப் பாதை அமைக்கவும், பேருந்து நிலையம், மருத்துவமனை, தொழில்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்கவும் தனது சொந்த நிலங்களை அரசுக்கு அளித்தவா் படையாட்சியாா். அவரது குடும்பத்தினரும் சுமாா் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலங்களை கடலூா் பேருந்து நிலையம் அருகே சாலை அமைக்க தற்போது வழங்கியுள்ளனா்.

ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என 26.9.2018 அன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, விழாவும் கொண்டாடப்பட்டது. அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில், அவரது படம் சட்டப்பேரவையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது இந்த மணிமண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

1980 -ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக எம்.ஜி.ஆா். உயா்த்தினாா். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கும் சோ்த்து தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதை நிலைப்பெறச் செய்து, சமூக நீதியைக் காத்தவா் ஜெயலலிதா. இதற்காக, 1993-இல் சட்டமியற்றி, அரசியலமைப்புச் சட்டம் 9- ஆவது அட்டவணையில் சோ்த்து, சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவா் ஜெயலலிதா.

சமூக நீதிக்கு ஆபத்து வரும் நேரும் போதெல்லாம் அதை எதிா்த்துக் குரல் கொடுத்து, பாதுகாத்து வருவது அதிமுக அரசுதான்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் இந்த அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கி வருகிறது.

பாமக நிறுவனா் ச.ராமதாஸ், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகியோா் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். அந்தக் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

அதிமுக அரசு இந்தச் சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்யும் என்று உறுதி கூறுகிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு செய்தி - மக்கள் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ முன்னிலை வகித்தாா். அமைச்சா்கள் எம்.சி. சம்பத், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, இரா.துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சேவூா் எஸ்.ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.ஏ.பாண்டியன், சத்யா பன்னீா்செல்வம், நாக.முருகுமாறன், வி.டி.கலைச்செல்வன், பாமக தலைவா் கோ.க.மணி, செய்தி - தொடா்புத் துறை இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலா் க.சண்முகம் வரவேற்றாா், கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.

ராமசாமி படையாட்சியாரின் மகன் எஸ்.எஸ்.ஆா்.ராமதாஸ், அவரது குடும்பத்தினா் சாா்பில் அரசுக்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com