மூடிக் கிடக்கும் அக்மார்க் தரச் சான்று ஆய்வகங்கள்!

அக்மார்க் தரச் சான்றுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்ட நிலையில், அதற்கான ஆய்வுக் கூடங்களை உணவுப் பாதுகாப்புத்துறை வசம் ஒப்படைத்து பகுப்பாய்வு முடிவுகளைக் காலதாமதமின்றி பெறுவதற்கு நடவடிக்கை
மூடிக் கிடக்கும் அக்மார்க் தரச் சான்று ஆய்வகங்கள்!


திண்டுக்கல்: அக்மார்க் தரச் சான்றுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்ட நிலையில், அதற்கான ஆய்வுக் கூடங்களை உணவுப் பாதுகாப்புத்துறை வசம் ஒப்படைத்து பகுப்பாய்வு முடிவுகளைக் காலதாமதமின்றி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேளாண் விற்பனைத் துறை மூலம் அக்மார்க் தரச் சான்று அளிக்கப்பட்டு  வந்தது. வேளாண் விளைபொருள்கள் (தரம் பிரிப்பு மற்றும் குறியிடுதல்) சட்டத்தின் கீழ், வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை மற்றும் வனப் பொருள்களுக்கு அக்மார்க் குறியீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 31 அக்மார்க் ஆய்வுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்மார்க் தர நிர்ணயம் செய்யப்படும் பொருள்கள், மத்திய மற்றும் மாநிலப் பட்டியல் என 2 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரிசி மற்றும் பருப்பு வகைகள் மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மாநிலப் பட்டியலில், தேன், நெய், வெண்ணெய், எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, கோதுமை, மசாலாப் பொடி, விதையில்லாப் புளி, தேங்காய் பவுடர், சேமியா, வெல்லம், கடலை மாவு, பெருங்காயம் உள்ளிட்ட பொருள்கள் உள்ளன.

அக்மார்க் தரச் சான்று பெற்ற உணவுப் பொருள்கள் சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-இன்படி அனைத்து வகையான உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) சான்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

 உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில், அனைத்து வகையான உணவுப் பொருள்களுக்கும் பதிவுச் சான்று மற்றும் உரிமச் சான்று பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதனால், அக்மார்க் தரச் சான்றின் முக்கியத்துவம் முற்றிலும் குறைந்துவிட்டது.  அக்மார்க் முத்திரை பெறுவது கட்டாயம் இல்லாத சூழலில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையச் சான்றினை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அக்மார்க் முத்திரை பெறுவதை உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்கத் தொடங்கினர். தற்போதைய நிலையில் தேன் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அக்மார்க் சான்று பெறுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அக்மார்க் ஆய்வுக் கூடங்கள் முடங்கும் நிலையில் உள்ளன. 

தடுமாறும் வேளாண் அலுவலர்கள்: அக்மார்க் தரச் சான்று அளிக்கும் வேளாண்மை அலுவலர்கள் (வேதியியல்), மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலா 5 நிறுவனங்கள் வீதம், ஒவ்வொரு ஆண்டும் 10 கட்டுமானர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

ஆவின் நிறுவனம் சார்பிலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாலும் அக்மார்க் ஆய்வுக் கூட அலுவலர்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இழப்பு ஏற்படுத்தும் ஆய்வுக் கூடங்கள்: அக்மார்க் குறியீடு முக்கியத்துவம் இழந்ததால், அதற்காக செயல்பட்டு வரும் ஆய்வுக் கூடங்கள் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கின்றன. வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நேரடியாக வலியச் சென்று முத்திரையிட வேண்டிய நிலையில் அக்மார்க் குறியீட்டு அலுவலர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள 31 அக்மார்க் ஆய்வுக் கூடங்களில், சில கூடங்கள் தனியார் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.    

ஆய்வுக்கு வரும் பொருள்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பெரும்பாலான  குறியீட்டு அலுவலகங்கள் மூடியே கிடக்கின்றன. அக்மார்க் குறியீட்டிற்கு அவசியம் ஏற்படாத நிலையில், கட்டடங்களுக்கான வாடகை, அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவு பாதுகாப்புத்துறைக்கு தேவை 

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மூலம் ஆய்வுக்கு சேகரிக்கப்படும் உணவு மாதிரிகள், சென்னை, சேலம், கோவை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 இடங்களிலுள்ள பகுப்பாய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுப்பாய்வு கூடத்திற்கும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்களுக்கான முடிவுகள் வெளியாவதற்கு சுமார் 6 மாதங்களுக்கும் கூடுதலாகிறது. இதனால், காலாவதியாகும் தேதி ஓராண்டுக்கு மேல் இருக்கும் பொருள்களை மட்டுமே ஆய்வுக்கு எடுக்குமாறு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 
 3 மாதங்கள், 6 மாதங்கள் காலாவதி காலம் கொண்ட பொருள்களை ஆய்வுக்கு எடுக்க முடியவில்லை என்பதால், அதன் தரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில், ஆய்வு முடிவுகளை உடனுக்குடன் பெறும் வகையில், அக்மார்க் தரச் சான்று ஆய்வுக் கூடங்களை, உணவுப் பாதுகாப்புத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி கண்ணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com