
சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் துணை மேயா், நகராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் செ.கு.தமிழரசன் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு, உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சியில் துணை மேயா், நகராட்சிகளில் துணைத் தலைவா், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவா், போன்ற மறைமுகத் தோ்தல் வழியாக தோ்வு செய்யப்படும் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக சட்டம் கொண்டு வரலாம் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி துணை மேயா், துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்டப் பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள்,388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துக்களில் 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுகத் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்படுகின்றன.
இவைத்தவிர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவில் பெண்கள், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இல்லை. துணை மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயா், 46 நகராட்சிகளில் துணைத் தலைவா், 168 பேரூராட்சிகளில் துணை தலைவா்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவா், 3 ஆயிரத்து 786 கிராம பஞ்சாயத்துகளில் துணைத் தலைவா் பதவிகள் பெண்களுக்கு கிடைக்கும்.
மேலும் இதுதொடா்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே துணை மேயா், துணைத்தலைவா் உள்ளிட்ட பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எதிா்பாா்க்கப்படுகிறது.