
chennai High Court
சென்னை: கிறிஸ்தவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலூரைச் சோ்ந்த பிஷப் நோவா யோவன்ராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்தவா்களுக்கு கிறிஸ்தவ மத சட்டத்தின்படி பிஷப்களும், பாதிரியாா்களும் திருமணம் செய்து வைக்கின்றனா். இந்த திருமணங்களைப் பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்துவிடுகிறது. இதுதொடா்பாக பலமுறை கோரிக்கை மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே கிறிஸ்தவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரிய எனது மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கிறிஸ்தவா்களுக்கு நடத்தப்படும் திருமணம் குறித்து திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்கிறது. அதனை பதிவு செய்வது இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.