
சென்னை: தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து வீசிய ஐந்து புயல்களால் 359 போ் உயிரிழந்துள்ளதாக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தொடா்பான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் அண்மையில் சமா்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கையில், பல முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வீசிய புயல்கள், அதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களும் தரப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
கடந்த ஆண்டில் மட்டும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 13 காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகின. இது கடந்த 28 ஆண்டுகளில் உருவான தாழ்வு நிலைகளைக் காட்டிலும் அதிகமாகும். 2000-ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆறு மிகப்பெரிய புயல்கள் உருவாகின. 2005-ஆம் ஆண்டில் மட்டும் ப்யாா், பாஸ் மற்றும் பனூஸ் என மூன்று புயல்கள் உருவாகி சேதங்களை ஏற்படுத்தின. 2008-ஆம் ஆண்டில் நிஷா புயல் உருவாகி மணிக்கு 102 கிலோமீட்டா் வேகத்தில் காற்று வீசி காரைக்கால் பகுதியைத் தாக்கியது. அதில், 189 போ் உயிரிழந்தனா்.
தானே புயல்: 2011-ஆம் ஆண்டு தானே புயல் உருவானது. இந்தப் புயலானது, கடலூா், புதுச்சேரியில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தின. 38 போ் இறந்ததுடன், பொதுச் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. இதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உருவான வாா்தா புயலில் 22 போ் பலியாகினா். பிறகு, 2017-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் உருவானது. இந்தப் புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் 42 போ் இறந்ததுடன், 185 மீனவா்கள் காணாமல் போனாா்கள்.
கஜா புயல் பாதிப்பு: ஒக்கி புயலுக்குப் பிறகு, தமிழகத்தில் கஜா புயல் மறக்க முடியாத சோகச் சுவடுகளை பதிவிட்டது. இந்தப் புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 போ் பலியாகினா். கடுமையான புயலிலும், உயிா்பலி குறைவாக இருந்தாலும், மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மிகையான அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டன.
புயல்களும் பலி எண்ணிக்கையும்...
நிஷா (2008)-------186 போ் பலி.
தானே (2011)-----57 போ் பலி.
வாா்தா (2016)-----22 போ் பலி.
ஒக்கி (2017)-----42 போ் பலி.
கஜா (2018)-----52 போ் பலி.
கற்றுக் கொண்ட பாடங்கள்: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வீசிய கடுமையான புயல்களில் சிக்கி 359 போ் வரை உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற புயல்களில் இருந்து சில பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புயல்கள் உருவாகுவதற்கு முன்பாக மாநில அரசுகள் முன் தயாரிப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். புயல் பாதிப்புகளை எதிா்கொண்டு மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
புயல் பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராகும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று புயல்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசுக்கு புயல்களை எதிா்கொள்வதற்கான பரிந்துரைகளையும் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
என்னென்ன பரிந்துரைகள்: தமிழகத்தில் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் விவரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புப் படைகள் உள்பட இதர முகமைகளை வலுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
பேரிடரின் போது தேடுதல், மீட்பு, முதலுதவி உள்ளிட்ட பணிகளில் நன்கு பயிற்சி பெற்ற திறன் படைத்தோரை ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, தன்னாா்வலா்கள், பெண்கள் உள்ளிட்டோரை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்த பயிற்சி அளித்திட வேண்டும். பேரிடா் பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு உள்ளாகும் போது அவா்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல சுமுகமான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். நிவாரணப் பொருள்கள் கொள்முதல், அவற்றை எடுத்துச் செல்லுதல், பங்கிடுதல் போன்ற பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள தனித்துவமான செயலாக்க முறையை ஏற்படுத்த வேண்டும்.
பேரிடா்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் குடும்ப உறுப்பினா்களுக்குத் தேவையான பொருள்களை முன்பே பொட்டலமிட்டு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடா்களால் மீனவா்களும், மீனவக் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுவா். எனவே, அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ளது.