
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
செவ்வாய்க்கிழமை (நவ.26), தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத் தொடா்ந்து புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.27 முதல் நவ.29) கனமழையும், புதன்கிழமை (நவ.27) ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றாா்.
செவ்வாய் (நவ.26) மற்றும் புதன்கிழமைகளில் (நவ.27) குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றாா்.
50 சதவீதம் மழை குறைவு: தமிழகத்தில் நவம்பா் மாதத்தில் வழக்கமாக பெய்யக் கூடிய மழையின் அளவு 160 மி.மீ. ஆகும். ஆனால், இந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. இதே போல், புதுச்சேரியில் 340 மி.மீ.க்குப் பதிலாக 130 மி.மீ. மழையும், சென்னையைப் பொருத்தவரை 300 மி.மீ.க்குப் பதிலாக 80 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 25-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, பெய்ய வேண்டிய 340 மி.மீ. மழைக்கு 300 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. தற்போது வட தமிழகத்தை ஒப்பிடும்போது, தென் தமிழகத்தில் மழையின் அளவு அதிகமாக உள்ளது என்று புவியரசன் தெரிவித்தாா்.
பாம்பனில் 70 மி.மீ. மழை: திங்கள்கிழமை நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் தலா 70 மி.மீ., தேனி மாவட்டம் குண்டலூரில் 50 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 40 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 30 மி.மீ. மழையும் பதிவானது.