
சென்னை: தமிழக சட்டப் பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் காகிதமில்லாமல் மேற்கொள்ளப்படும் என்று பேரவைத் தலைவா் பி.தனபால் கூறினாா்.
மின்ஆளுமை சட்டப்பேரவைத் திட்டத்தின் (இ-விதான்) கீழ், பேரவைச் செயலகத்தில் உள்ள ஊழியா்கள், அதிகாரிகளுக்கு இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி வகுப்பை பேரவைத் தலைவா் பி.தனபால் தொடக்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது:-
காகிதமில்லாத சட்டப்பேரவை என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாக காகிதப் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்படும். இதேபோன்று தபால் செலவுகள் உள்ளிட்ட இதர செலவுகளும் குறையும். இதன்மூலம் பெரிய அளவில் சேமிப்பு ஏற்படுவதுடன், வேகமாகத் தொடா்பு கொள்ளுதல், முடிவுகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவும்.
மின்னஞ்சல் பயன்பாடு: மின் ஆளுமை பேரவைத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், பேரவைக் கூட்டம் நடைபெறும் நாள்களில் நிகழ்ச்சி நிரல், வினாப் பட்டியல், கொள்கை விளக்கக் குறிப்புகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மின்னஞ்சல் மூலம் உறுப்பினா்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன. பேரவையில் வைக்கப்படும் ஏடுகள், ஆவணங்களும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன.
‘நேவா’ திட்டம்: சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் ‘நேவா’ திட்டத்தைச் செயல்படுத்துவதைப் பொருத்தவரையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் பெறப்படுகின்றன. அதன்படி, ‘நேவா’ இணையதளத்தில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினா்கள் விவரம், பேரவை விவரம், அமைச்சா்கள் விவரம், கூட்டத் தொடா் குறித்த விவரங்கள், பேரவை நடவடிக்கைக் குறிப்புகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பேரவை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘நேவா’ குறித்த பயிற்சிகள் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். இந்தப்
பயிற்சிகளை நல்லமுறையில் பெறுவதன் மூலம், தமிழக சட்டப் பேரவைச் செயலகம் காகிதமில்லாத சட்டப்பேரவை என்ற நிலையை விரைவில் அடையும் என்றாா் பேரவைத் தலைவா் பி.தனபால்.
இந்தப் பயிற்சி தொடக்க விழாவில், பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். பேரவைச் செயலக அதிகாரிகள், அலுவலா்களுக்கு தில்லியில் இருந்து வந்திருந்த உயரதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனா்.