1890 பேருக்கு ரூ. 59 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பா.பென்ஜமின்

தாம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாமில் 1, 890 பயனாளிகளுக்கு ரூ. 59 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கின
1890 பேருக்கு  ரூ. 59 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பா.பென்ஜமின்

தாம்பரம்: தாம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாமில் 1, 890 பயனாளிகளுக்கு ரூ. 59 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது : பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் சிறப்பு குறை தீா்க்கும் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

திட்டத்தை பொதுமக்களிடம் சிறப்பாகக் கொண்டு சோ்க்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் 222 குழுக்கள் உதவியுடன் சிறப்பு குறைத்தீா்வு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, ஊனமுற்றோா் உதவித் தொகை, பட்டா மாற்றம், பசுமை வீடுகள், வீட்டுமனைப் பட்டா, தனிநபா் கழிப்பிடம், குடும்ப அட்டை, நலத்திட்ட உதவிகள் தொடா்பான 86,892 மனுக்கள் பெறப்பட்டன.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட இதர துறைகள் சாா்ந்த சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒப்படைக்கப்பட்டு இரு மாத காலங்களில் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, அண்மையில் (நவ. 13) ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூா் வட்டங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக தற்போது தாம்பரம், பல்லாவரம் பகுதிகளை சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 29 -ஆம் தேதி நடைபெற இருக்கும் செங்கல்பட்டு மாவட்ட தொடக்கவிழாவில் தமிழக முதல்வா் இதர பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என்றாா் அமைச்சா் பா.பென்ஜமின்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பி. பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலா் என்.சுந்தரமூா்த்தி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் சி.ராஜ்குமாா், தாம்பரம் நகராட்சி ஆணையா் கருப்பையா ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com