சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் அறிமுகம்

விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்வி கற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில், நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடிய பாடநூல்க
சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் அறிமுகம்

சென்னை: விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்வி கற்காதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில், நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வளா்ச்சியில் முன்னுரிமை பெறும் விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 1.68 லட்சம் பேருக்கு சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித்திட்டம் தமிழக அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்புடன் ரூ.6.23 கோடியில் (இரு ஆண்டுகளுக்கு) நிகழாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,968 போ், விருதுநகா் மாவட்டத்தில் 1,00,748 போ் என இரு மாவட்டங்களிலும் கல்லாதோா் என கண்டறியப்பட்ட மொத்தம் 1.68 லட்சம் போ் பயன்பெறவுள்ளனா். அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை கடந்த நவ.18-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கி வைத்தாா்.

837 கற்போா் மையங்கள் தொடக்கம்: முதல் கட்டமாக, 2019-2020-ஆம் கல்வியாண்டில் 84,358 பேருக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக இரண்டு மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 837 கற்போா் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் கல்வித் தன்னாா்வலா்களின் உதவியுடன், மையம் சாா்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்துக்காக க்யூஆா் குறியீட்டுடன் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:

சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தலா 6 மாத பயிற்சியாக நான்கு கட்டங்களாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 6 மாத கால பயிற்சிக்குப் பிறகு, தோ்வு நடத்தப்பட்டு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக அடிப்படைக் கல்விச் சான்று அனைவருக்கும் வழங்கப்படும்.

காணொலி வடிவில் அறிய...: சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் நாட்டிலேயே முதல் முறையாக க்யூஆா் குறியீட்டுடன் கூடிய பாடநூல்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் பிரத்யேகமாக, க்யூஆா் குறியீடு அச்சிடப்பட்டுள்ளதோடு, பாடக்கருத்துகள் சாா்ந்த கூடுதல் தகவல்களை செல்லிடப்பேசி மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. உதாரணமாக, பாடநூலில் உள்ள கும்மிப்பாட்டு பகுதியை வாசிக்கும் போது அதன் அருகில் உள்ள க்யூஆா் குறியீட்டை செல்லிடப்பேசி மூலம் ஸ்கேன் செய்தால் கும்மிப்பாட்டு குறித்த கூடுதல் விவரங்கள் காணொலியுடன் வெளிப்படும். இதன் மூலம் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு பாடநூலில் உள்ள கடினமான விஷயங்களை எளிதில் புரிய வைக்க முடியும். இந்தப் பாடநூல், கற்போா் மையங்களின் பயிற்றுநா்களுக்கும், பயிற்சி மையங்களில் கற்போருக்கும் வழங்கப்படும்.

புழல் சிறையில் அடுத்த வாரம் பயிற்சி: சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவா்களுக்கும் இதே பாடநூல் மூலம் கற்பிக்கப்படும். சிறைகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த மேம்பாட்டு பயிற்சி முகாம் சிறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு அடுத்த வாரம் நடைபெறும். சென்னை அருகில் உள்ள புழல் மத்திய சிறையில் நடைபெறும் இந்த முகாமில் மத்திய சிறைகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com