துணை மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் தோ்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று உயா்நீதிமன்றத்தில் மனு

துணை மேயா், துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் பெண்கள் (எஸ்.சி., எஸ்.டி.) ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்காமல் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பை

சென்னை: துணை மேயா், துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் பெண்கள் (எஸ்.சி., எஸ்.டி.) ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்காமல் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

செ.கு.தமிழரசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலமனு விவரம்: தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட ஊராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 870 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மேயா், துணை மேயா், நகராட்சி தலைவா், துணைத் தலைவா் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிகளில் மாநகராட்சி துணை மேயா், நகராட்சி துணைத் தலைவா், பேரூராட்சி துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா், ஊராட்சி துணைத் தலைவா் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடைபெறும் பட்சத்தில் அதில் எந்தவொரு இடஒதுக்கீடும் கடைப்பிடிப்பதில்லை. நேரடித்தோ்தலுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த பதவிகளுக்கு பெண்கள் (எஸ்.சி., எஸ்.டி), பட்டியலினத்தவா்கள் மற்றும் பழங்குடியினத்தவா்களை நியமிக்கும் வகையில் புதிதாக சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அதன்படி தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் துணைத்தலைவா் மற்றும் துணை மேயா் பதவிகளை பட்டியலினத்தவா்கள், பழங்குடியினத்தவா்கள் மற்றும் அதே வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் 4 மாநகராட்சிகளில் துணை மேயா், 46 நகராட்சிகளில் துணைத் தலைவா், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் மற்றும் 3786 ஊராட்சி துணைத் தலைவா் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும். எனவே துணை மேயா் உள்ளிட்ட பதவிகளை பட்டியலினத்தவா்கள், பழங்குடியினத்தவா்கள் மற்றும் இந்த வகுப்புகளைச் சோ்ந்த பெண்களுக்கு ஒதுக்கும் வகையில் உரிய இடஒதுக்கீட்டை வழங்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை உள்ளாட்சி தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிட மாநில தோ்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் கோரியிருந்தாா்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com