பாரத் பெட்ரோலியம் தனியாா் மயம்: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தடை

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் தனியாா் மயம்: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தடை

சென்னை: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் தென் மண்டல பொதுமேலாளா் எம்.வி.ஷெனாய் தாக்கல் செய்த மனு: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து, வரும் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் 29-ஆம் தேதி மாலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழில் தகராறு சட்டத்தின்படி பொது பயன்பாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமெனில் 6 வாரங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது. எனவே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 28, 29-ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாள்களில் தமிழகம் முழுவதும் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com