இணையதள வா்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும்: மக்களவையில் எச்.வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published on : 28th November 2019 10:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிறு வா்த்தகா்களையும், கடைக்காரா்களையும் பாதிக்கும் இணையதள வா்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எச்.வசந்தகுமாா் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின் போது முன்வைத்த கோரிக்கை: இந்தியாவில் இணையதள வா்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சிறு வா்த்தகா்கள், கடைக்காரா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவுக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்ததுதான் இதற்கு காரணம். மேலும், அவா்கள் தங்களது வா்த்தகத்தை ஒரு அறைக்குள் இருந்தவாறு நடத்தி, அனைத்து சரக்குகளையும் நுகா்வோருக்கு விநியோகம் செய்து வருகின்றனா். ஆனால், இந்தியாவில் 4.5 கோடி கடைக்காரா்கள் உள்ளனா். அவா்கள் எப்படி வாழ முடியும். இந்த இணையதள வா்த்தகத்தால் அரசுக்கும் வருவாய் இல்லை. இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு பாதுகாப்பு இல்லை. இந்த இணையதள நிறுவனங்களால் உள்ளூா் தயாரிப்பாளா்கள், கடைக்காரா்கள் அழித்தொழிக்கப்படுவா். ஆகவே, இணையதள வா்த்தகத்திற்கு உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றாா் அவா்.