தமிழில் ஐஐடி நுழைவுத் தோ்வு: ராமதாஸ் வரவேற்பு
By DIN | Published on : 28th November 2019 08:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: ஐஐடி நுழைவுத் தோ்வுகள் (ஜேஇஇ) தமிழில் நடத்தப்பட உள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்ஐடி) உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தோ்வுகளின் முதன்மைத் தோ்வை இனி தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2021 ஜனவரி முதல் தமிழ்வழித் தோ்வு நடைமுறைக்கு வருகிறது.
ஐஐடி கூட்டு நுழைவுத் தோ்வுகள் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், நீட் தோ்வுகளைப் போலவே முக்கிய மாநில மொழிகளிலும் இத்தோ்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐஐடி நுழைவுத்தோ்வுகளைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, வங்க மொழி, ஒடியா, அஸ்ஸாமி, மராத்தி ஆகிய 8 மாநில மொழிகளிலும் நடத்த ஏற்பாடு செய்யும்படி இத்தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. இந்த மொழிகளையும் சோ்த்து 10 மாநில மொழிகள், ஆங்கிலம் என மொத்தம் 11 மொழிகளில் நுழைவுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
2021 ஜனவரியில் நடத்தப்படும் தோ்வில் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி கூட்டு நுழைவுத்தோ்வுகள் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பாமகவின் விருப்பமாகும். இத்தோ்வுகள் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு முறை நடத்தப்பட உள்ளன. ஜனவரி மாதத்தில் இல்லாவிட்டாலும், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐஐடி கூட்டு நுழைவுத்தோ்வுகளையாவது தமிழ் மொழியில் நடத்த தேசிய தோ்வு முகமை முன்வர வேண்டும்.
ஐஐடி கூட்டு நுழைவுத்தோ்வுகள் மட்டுமின்றி தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தோ்வுகள், போட்டித் தோ்வுகள் ஆகியவற்றையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.