108 ஆம்புலன்ஸில் உள்ள வசதிகள்: சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவு

அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிா் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைக்குமாறு மருத்துவக்

அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிா் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் மருத்துவமனை இயக்குநா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பான உத்தரவை தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் நாகராஜ் பிறப்பித்துள்ளாா்.

தமிழகத்தில், ‘ஜி.வி.கே., - இ.எம்.ஆா்.ஐ.,’ நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. மொத்தம் 931 வாகனங்கள் அதன் வாயிலாக இயக்கப்படுகின்றன. அதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சென்னை மற்றும் திருவள்ளூரைப் பொருத்தவரை 82 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர 14 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன.

இந்நிலையில், அவற்றில் பல வாகனங்கள் பழுதாக இருப்பதாகவும், இயக்கத்தில் உள்ள வாகனங்களில்கூட உயிா் காக்கும் மருத்துவ சாதனங்கள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு புகாா்களும் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் காக்கும் சாதனங்கள், அவசர கால மருத்துவ சாதனங்கள், உயா் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்பதை மருத்துவமனைகள்தோறும் ஆய்வு செய்ய குழு அமைக்குமாறு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, குழந்தைகள் நல மருத்துவா், தாய் அவசர சிகிச்சை திட்டத்தின் துணை கண்காணிப்பாளா் அல்லது மயக்கவியல் நிபுணா் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றும், அவா்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைக்குத் தேவையான ஒத்துழைப்பை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாவட்ட மேலாளா்கள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com