சென்னையை நவ., 30, டிச. 1, 2ம் தேதிகளில் வெச்சி செய்யப் போகுதா மழை?

சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2ம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Chennai Rain update
Chennai Rain update


சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2ம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதே நாட்களில் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மழை நிலவரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, வரும் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் தமிழகத்தில் வச்சி செய்யப் போகும் மழை காத்திருக்கிறது. நமக்கு வில்லனான வறண்ட காற்று தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் மிக விரைவில் தாக்க உள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒருநாளாவது இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்துவிடும்.

நேற்று தாம்பரத்தில் 15 செ.மீ. மழை பதிவாகும் என்று யாராவது எதிர்பார்த்தார்களா? நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக இல்லை. எந்த காற்றழுத்தத்தாழ்வும் இல்லை, எந்த புயலும் இல்லை, சும்மா கிழக்கு திசையில் இருந்து வீசிய காற்றும், வளிமண்டல மேலடுக்கும் இணைந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தின.

இதேப்போல, தமிழகத்தின் மேற்சொன்ன மாவட்டங்களோடு, புதுச்சேரி, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த மழை பலமாக இருக்கும், மிதமாக இருக்கும் என்றெல்லாம் கணிக்கவே முடியாது.  யாராலும் அதுபற்றி கணிக்க முடியாது. எனவே, இப்போதில் இருந்து சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகளுக்கு மழை விருந்து ஆரம்பிக்கிறது.

என்னவோ இந்த மழை குறித்து ஏதோ அதிகமாக நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அதே சமயம் வெள்ளம் பற்றிய பயமும் வேண்டாம், நமக்கு மழை வேண்டும், ஏரிகளில் தற்போது 35% நீர் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு நாள் போக வேண்டும், மழை எப்படி இருக்கும் என்பதை சொல்ல. அதேப்போல இன்று முதல் நாளை காலை வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com