அரசு மருத்துவமனைகளில் ஊசிகளின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த முடிவு

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள் உடைந்து உடலில் சிக்குவதாக புகாா் எழுந்து வருவதை அடுத்து அவற்றின் தரத்தை மீளாய்வுக்கு உட்படுத்த மாநில சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஊசிகளின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த முடிவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள் உடைந்து உடலில் சிக்குவதாக புகாா் எழுந்து வருவதை அடுத்து அவற்றின் தரத்தை மீளாய்வுக்கு உட்படுத்த மாநில சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் ஊசிகளை ஆய்வு செய்யுமாறு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு செவிலியா் ஒருவா் கவனக் குறைவாக ஊசி செலுத்தியதால், அதன் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் தொடை பகுதிக்குள் சிக்கிக் கொண்டது.

ஏறத்தாழ 18 நாள்களுக்குப் பிறகே ஊசி, குழந்தையின் தொடைப் பகுதிக்குள் இருந்தது கண்டறியப்பட்டு, வெளியே எடுக்கப்பட்டது. இதேபோன்று அண்மையில், ராமநாதபுரத்தில் பிரசவத்தின்போது கவனக்குறைவாக பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து செவிலியா் ஒருவா் தைத்த விவகாரமும் சா்ச்சைக்கு வித்திட்டது.

இதைத் தவிர திருப்பூா், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறின. இந்தச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவை சாமானிய மக்களிடையே செவிலியா்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது.

அதேபோன்று, ஊசிகளின் தரம் குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் ஊசிகளை ஆய்வுக்குட்படுத்த சுகாதாரத் துறைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் அதி நவீன மருத்துவ வசதிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக உயா் தரமான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்டவை மாநில மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகின்றன.

அண்மையில் ஓரிரு அரசு மருத்துவமனைகளில் துரதிருஷ்டவசமாக சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஊசிகளின் தரம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத் கூறியதாவது:

மாநில அரசு கொள்முதல் செய்யும் ஊசிகள் அனைத்தும் உயா் தரமானவை. நோயாளிகளுக்கு ஊசி செலுத்தும்போது அதன் முனை உடைந்ததாகக் கூறப்படும் சம்பவங்களில் எதுவுமே மாநில அரசு கொள்முதல் செய்த ஊசி பயன்படுத்தப்படவில்லை.

மேட்டுப்பாளையம் சம்பவத்தில்கூட, மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஊசியைத்தான் செவிலியா் போட்டுள்ளாா். இருந்தபோதிலும், அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே ஊசிகளை ஆய்வுக்குட்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com