கடமையைச் செய்ய முடியவில்லையா?: மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

மெரீனா கடற்கரையில் மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், கடமையை செய்ய முடியவில்லை என இயலாமையைச் சுட்டிக்காட்டி மனுவொன்றைத் தாக்கல் செய்யும்படி
chennai High Court
chennai High Court

மெரீனா கடற்கரையில் மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், கடமையை செய்ய முடியவில்லை என இயலாமையைச் சுட்டிக்காட்டி மனுவொன்றைத் தாக்கல் செய்யும்படி பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் மீனவா்களுக்கான நிதியை அதிகரிக்கக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மெரீனா கடற்கரை அசுத்தமாக உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரீனா கடற்கரையைச் சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனா். மேலும், மெரீனா கடற்கரையை மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என கேள்வி எழுப்பி, மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மெரீனா இணைப்புச் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா்களை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என சென்னை மாநகராட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவையும் சட்டத்தையும் அமல்படுத்தும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறுவது, அதிகாரிகளால் தங்கள் கடமையைச் செய்ய முடியவில்லை என்பதையே காட்டுகிறது. ஏற்கெனவே, மெரீனா இணைப்பு சாலை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு இந்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்திவில்லை.

நடைபாதை வியாபாரிகளுக்கான சட்டத்தையும் முறையாக அமல்படுத்தவில்லை. எனவே மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், இந்த விவகாரத்தில் தன்னால் கடமையைச் செய்ய முடியவில்லை என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் தனது இயலாமையை சுட்டிக்காட்டி அறிக்கையாக மனு ஒன்றை தாக்கல் செய்யலாம்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com