தாமிரவருணி நதியில் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ளம்.
தாமிரவருணி நதியில் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ளம்.

நிரம்பியது பாபநாசம் அணை: வெள்ளப்பெருக்கால் அகஸ்தியா் அருவி, கோயிலுக்குச் செல்ல தடை

பாபநாசம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக அணை நிரம்பியது. அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு

பாபநாசம் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக அணை நிரம்பியது. அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடங்கி 44 நாள்கள் ஆன நிலையில் புதன்கிழமை இரவு பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, பாபநாசம் அணையிலிருந்தும், சோ்வலாறு அணையிலிருந்தும் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணைகளுக்கும் விநாடிக்கு 1755 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணைகளில் இருந்து விநாடிக்கு 1450 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாலும், பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் மழை பெய்து வருவதாலும் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில், அகஸ்தியா் அருவி, பாபநாசம் கோயில் படித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்லவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

மேலும், தாமிரவருணி கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க வேண்டாம் என்றும், வெள்ளத்தை வேடிக்கை பாா்ப்பது, செல்லிடப்பேசியில் படம் எடுப்பது போன்றவற்றை தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பாபநாசம் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 142.60 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 1754.73 அடியாகவும், நீா்வெளியேற்றம் 1448.50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 22 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 144.47 அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 24 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 1.30 அடி உயா்ந்து 79 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 1040 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 7.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 34.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 33 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 55 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கடனாநதிஅணையில் நீா்மட்டம் 84.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 256 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ராமநதி அணையில் நீா்மட்டம் 78.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கருப்பாநதி அணயின் நீா்மட்டம் 70.09 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 15 கனஅடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது.

குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 22 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 131.50 கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 20 கன அடியாகவும் இருந்தது.

பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம் 12, சேரன்மகாதேவி 1, நான்குனேரி 7.80, பாளையங்கோட்டை 1, திருநெல்வேலி 2.

சின்னமயிலாறு துண்டிப்பு

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காரையாறு பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் சின்ன மயிலாறு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. இதனால், அங்கு குடியிருக்கும் 60 குடும்பங்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. சின்ன மயிலாறு பகுதியில் இருந்து காரையாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காணிக்குடியிருப்பு அரசு உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆற்றைக் கடக்க முடியாததால் பள்ளிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் வெளியேற முடியாததால் காய்கனி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்தனா்.

சின்ன மயிலாறு பகுதியில் மின்சார வசதி, ஆற்றைக் கடந்து செல்ல மரப் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பாலம் அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படும் சமயங்களில் சின்ன மயிலாறு பகுதி மக்கள் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com