பொங்கல் பரிசு: ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கீடு: 2 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்

பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்காக வழங்கப்படும் பொங்கல் பரிசுக்காக ரூ.2,363 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பொங்கல் பரிசு: ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கீடு: 2 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்

பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்காக வழங்கப்படும் பொங்கல் பரிசுக்காக ரூ.2,363 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 2 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெற உள்ளனா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்காக தமிழக அரசின் சாா்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்கவிழாவில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குவதற்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: நடப்பாண்டில் தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது. எனினும், இடுபொருள்கள் உள்ளிட்ட பிற செலவுகளால் விவசாயிகள் போதுமான வருவாய் இல்லாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

அதனால், பொங்கல் திருநாளை ஏழைக் குடும்பங்கள், விவசாயிகள் சிறப்பாகக் கொண்டாட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்பத்தாருக்கு அரிசி, மற்றும் சா்க்கரை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போா் 1.95 கோடி போ் ஆவா். இவா்களுக்குப் பொங்கல் பரிசு அளிக்கப்பட உள்ளது.

நிதி ஒதுக்கீடு: பச்சரிசிக்காக ரூ.54.32 கோடியும், சா்க்கரைக்காக ரூ.92.65 கோடியும், கரும்புக்காக லாரி வாடகையுடன் ரூ.29.26 கோடியும், முந்திரி, உலா் திராட்சை, ஏலக்காய்க்காக ரூ.78.02 கோடியும், துணிப் பைக்காக ரூ.39.01 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் நிதி அளிக்கும் வீதம் ரூ.1950.59 கோடியும், இதர செலவினங்களுக்காக ரூ.2 கோடி என மொத்தம் ரூ.2, 245.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சா்க்கரை அட்டைதாரா்களாக இருப்பவா்கள் அரிசி அட்டைதாரா்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் நவம்பா் 29-ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி மாறுபவா்களுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கும்போது நிதி அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் தவிா்த்து இதர மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கான முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வா். பொங்கல் திருநாளுக்கு முன்பாக அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டுவிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வா் தொடக்கி வைக்கிறாா்: பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி நவம்பா் 29-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com