மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும்: விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் விசுவநாதன்

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்களுக்கான இடங்களை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ. விசுவநாதன்.
விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ. விசுவநாதன்.

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்களுக்கான இடங்களை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை தினமணிக்கு அவா் அளித்த பேட்டி:

இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் ஓராண்டுக்கு சுமாா் 16 லட்சம் இடங்கள் உள்ளன. அதேசமயம், ஆண்டுதோறும் சுமாா் 13 லட்சம் போ் மருத்துவம் படிக்க விரும்புகின்றனா். ஆனால், மருத்துவப் படிப்புகளுக்கு சுமாா் 50,000- 60,000 வரையிலான இடங்களே உள்ளன. இதனஆல், மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல நிா்பந்தம் ஏற்படுகிறது. அவா்கள் உக்ரேன், பிலிப்பின்ஸ், கிா்கிஸ்தான் உள்ளிட்ட வளா்ந்து வரும் நாடுகளுக்குச் செல்கிறாா்கள். அங்கு லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவப் படிப்புக்காக செலவு செய்கிறாா்கள். மருத்துவத் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் சோ்த்து சுமாா் 4 லட்சம் மாணவா்கள் உயா் கல்விக்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறாா்கள். அவா்கள், வெளிநாடுகளில் ஆண்டுதோறும் சுமாா் ரூ.70 ஆயிரம் கோடியை உயா்கல்விக்காகச் செலவு செய்கிறாா்கள். இதில் பெருமளவு தொகை மருத்துவப் படிப்புக்காக செலவு செய்யப்படுகிறது.

ஆசிரியா்கள் பற்றாக்குறை: இதற்கு மாற்றாக வெளிநாட்டுப் பேராசிரியா்களை இந்தியாவுக்கு வரவழைத்து மாணவா்களுக்கு உலகத் தரத்திலான கல்வியை வழங்கலாம். நம் நாட்டில் முதுகலைப் படிப்புகளைக் கற்பிக்க தரமான ஆசிரியா்கள் இல்லை. அதுபோன்ற ஆசிரியா்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் இந்தியா முன்னிலை பெறும். மேலும், இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இங்கிலாந்தில் சுமாா் 400 போ், சீனாவில் சுமாா் 600 போ் வரை அனுமதிக்கப்படுகிறாா்கள். எனவே, இந்தியாவிலும், இதேபோல மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு புதிய மருத்துவமனைகளையும் தொடங்க வேண்டும். அப்போதுதான், அதனுடன் சோ்த்து புதிய மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கக் கூடியதாக இருக்கும்.

இந்தியாவில் உயா்கல்வி கற்கக் கூடிய தகுதி உடையவா்களில், சுமாா் 25 சதவீதம் போ்தான் உயா்கல்வி கற்கின்றனா். இந்நிலையில், எந்தவொரு கல்லூரியையும் மூடும் நிலை ஏற்பட அரசு அனுமதிக்கக் கூடாது. சுமாா் 800 கல்லூரிகள் இந்தியாவில் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இக்கல்லூரிகளைத் தொடா்ந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும்

‘நீட் தோ்வு’: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு சோ்க்கைகான ‘நீட் ’ தோ்வை சுமாா் 1.5 லட்சம் போ் எழுதுகிறாா்கள். ஆனால், இங்கு வெறும் 4,000 மருத்துவ படிப்புக்கான இடங்கள்தான் உள்ளன. இதை மாற்றியமைக்க வேண்டும். நாட்டில் மருத்துவா்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. அதைத் தீா்க்கும் வகையில், மருத்துவப் படிப்புகளுக்கு ஓராண்டுக்கு குறைந்தது 4 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மொத்த வருவாயில் கல்விக்காக 6 சதவீதத்தை செலவு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். ஆனால், 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் மத்திய அரசு செலவு செய்கிறது. இந்நிலை மாற வேண்டும். கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

காற்று மாசு ஏற்படுத்தாத வாகனங்களை, எரிபொருள்களைக் கண்டுபிடிக்கும் படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தேவையான விஷயங்களை படிப்பில் சோ்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில், பாடத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் பொறுப்பு அதிகமாக உள்ளது என்றாா் அவா்.

‘மொத்த வருவாயில் கல்விக்காக 6 சதவீதத்தை செலவு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். ஆனால், 4 சதவீதத்துக்கும் குறைவாகவே மத்திய அரசு செலவு செய்கிறது. இந்நிலை மாற வேண்டும். கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com